தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் !

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்நாடு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் அவர்களிடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு அரங்கேற்றியதாகக் கூறப்படும் தமிழின அழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி அனுசரிக்கப்படும் ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள்’ தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்விலேயே சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (10) சந்திரசேகர் ஜோசப் விஜய் அவர்களுக்கு விரிவான கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றுள்ளமைக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள்’ என ஈழத்தமிழர்கள் நினைவுகூர்ந்து வருவதாகவும், தமிழின அழிப்புக்கு நீதி கோரும் இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு மிகப்பெரிய பலமாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், ஈழத்தமிழர் மீதான தாக்குதல்கள் இனவழிப்பாகும் என்றும் அதற்குச் சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நினைவுபடுத்தியுள்ள அவர், அதேபோன்ற உறுதியான தீர்மானம் தற்போதைய சட்டசபை அமர்விலும் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கை உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையையும் வலுச்சேர்க்கும் என்றும், தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்தில் தமிழ்நாட்டின் உறுதியான பங்கைக் காட்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




