பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்து தப்பியோடிய நபர் கைது!

கட்டுநாயக்க பகுதியில் பொலிஸ் அதிகாரியுடன் மோதி, அவரின் துப்பாக்கியைப் பறித்து, மற்றுமொரு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் பணியக அதிகாரிகள் குழுவினர், திவுலபிட்டிய பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 31 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் பொலிஸ் அதிகாரியிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திவுலபிட்டியவைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதுடன், அவர் 2008 முதல் 2010 வரை சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அதிகாரிகள் நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொடை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரைத் தேடும் பணிகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.




