உயர்தர மாணவர் சாதனைகளை ஊக்குவிக்கும் ஜனாதிபதி நிதியத்தின் புதிய முன்னெடுப்பு

2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாவட்ட மட்டத்தில் பாராட்டும் ஜனாதிபதி நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முதல் நிகழ்வு இன்று (26) முற்பகல் கிளிநொச்சியில் நடைபெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், ஜனாதிபதி நிதியத்தின் புதிய வேலைத்திட்டமாக 2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 2023/2024 கல்வியாண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் பாராட்டப்பட்டனர்.
கடந்த முறை ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உயர் சித்திகளைப் பெற்ற தலா 10 மாணவர்கள் பாராட்டப்பட்ட நிலையில், இம்முறை அந்த எண்ணிக்கை 20 மாணவர்களாக இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முன்னேற்றமடைந்த மனித வளத்தை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி நிதியம் வழங்கும் பங்களிப்பு பாராட்டத்தக்கது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் கல்வித் திறமைகளை ஊக்குவிப்பதுடன், சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு மாவட்ட மட்டத்தில் உரிய அங்கீகாரம் வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.




