எரிபொருள் நெருக்கடியை தணிக்க இந்திய கப்பல் வருகை

இந்திய அரசாங்கத்தின் விசேட ஒத்துழைப்புடன் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் கப்பல் இன்று பிற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதன்படி, இன்று பிற்பகல் 1.30க்கு எரிபொருளை ஏற்றிய ஹரி ஆனந்த (HARI ANAND) என்ற கப்பல் துறைமுறைகத்தை வந்தடைந்ததாக துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் 18 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலும், 18 ஆயிரம் மெற்றிக் தொன் 92 ரக பெற்றோலும் கொண்டு வரப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட இராஜதந்திர தொடர்புகளின் விளைவாக, லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு இந்த எரிபொருளை வழங்க இந்திய எண்ணெய் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் வெவ்வேறு நாடுகளில் இருந்து 10 எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




