போகம்பரை மீண்டும் சிறைச்சாலையாகும்!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய போகம்பரை சிறைச்சாலை, மீண்டும் முழுமையான சிறைச்சாலையாக இயங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அந்த வர்த்தமானியின் படி, போகம்பரை சிறைச்சாலையின் அதிகார வரம்பு முழு இலங்கையையும் உள்ளடக்கியதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத் தளமாகவும் மாற்றும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்த போகம்பரை சிறைச்சாலை, தற்போது நாட்டில் அதிகரித்து வரும் சிறைச்சாலை நெரிசலைக் கருத்தில் கொண்டு மீண்டும் சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட உள்ளது.
இலங்கையின் பல சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை, அவற்றின் கொள்ளளவை வெகுவாக மீறியுள்ள நிலையில், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவமும் இந்த விடயத்தை மீண்டும் தேசிய கவனத்திற்கு கொண்டு வந்தது.
இந்த பின்னணியிலேயே, சிறைச்சாலை வசதிகளை விரிவுபடுத்தும் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக போகம்பரை சிறை மீள நிறுவப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.




