30 பந்துகளில் சதம் விளாசி புதிய T20 சாதனை படைத்த அபிஷேக் சர்மா!

டெஸ்ட் விளையாடும் நாட்டைச் சேர்ந்த வீரர்களில் அதிவேக இருபதுக்கு 20 சர்வதேச சதத்தை அடித்து இந்தியாவின் அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார்.
புதுடெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடிய அபிஷேக் சர்மா, வெறும் 30 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இதன்படி அவர், நியூசிலாந்தின் ஃபின் ஆலன் மற்றும் ஸிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோரின் 33 பந்து சத சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் மொத்தம் 34 பந்துகளை எதிர்கொண்ட அவர், 11 ஆறு ஓட்டங்கள் மற்றும் 9 நான்கு ஓட்டங்களுடன் 108 ஓட்டங்களை பெற்றார்.
இதற்கு முன்பு இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிராக 35 பந்துகளில் அடித்ததே அதிவேக சதமாகக் கருதப்பட்டது.
சர்வதேச 20க்கு 20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். இதற்கு முன்னதாக உள்நாட்டு 20க்கு 20 கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக 28 பந்துகளிலும் அவர் சதம் அடித்துள்ளார்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 221 ஓட்டங்களை பெற்றது
எனினும், இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.




