ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான குற்றப்பத்திரிகைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவரிடம் கையளிக்கப்பட்டன.
மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இந்தக் குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டதோடு, சந்திரசேனவை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை ஜூலை 22 ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தகவல்படி, 2014 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில், அரச செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 36,000 கிலோகிராம் சோள விதைகளை தனது அரசியல் ஆதரவாளர்களுக்கிடையே விநியோகிப்பதற்காக, அநுராதபுரம் மாவட்ட செயலகத்தின் கொள்முதல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சந்திரசேன அழுத்தம் கொடுத்ததாக இக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஏழை விவசாயிகளுக்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட வேண்டிய இந்த விதைகள், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் லாபம் பெறும் நோக்கில் திசைதிருப்பப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.




