நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு? 22வது திருத்தம் விரைவில்!

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு, அரசியலமைப்பின் 77ஆவது உறுப்புரையின் கீழ் சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ளதாக ஆங்கில செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்குச் சமாந்தரமாக, மேல் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கீழ் நீதிமன்ற நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் வகையில், 1983 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதன்படி உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும் ,மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும்,மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும்
மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் ஓய்வுபெறும் வயது 62 ஆகவும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்தச் சட்ட மூலங்கள் விரைவில் அரச வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளன.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டு குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்குப் பின்னரே, இந்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும்.
நீதிமன்ற அமைப்பில் தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அனுபவமிக்க சிரேஷ்ட நீதிபதிகளின் சேவையைப் பெற்று வழக்குகளை விரைவுபடுத்துவதே இதன் பிரதான நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒரு மில்லியன் மக்களுக்கு 40 முதல் 60 நீதிபதிகள் வரை உள்ள நிலையில், இலங்கையில் ஒரு மில்லியன் மக்களுக்கு சுமார் 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்றும், நீதித்துறை சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டால் அதற்குப் பொதுமக்கள் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகலாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இவ்வாறான சட்டத் திருத்தத்திற்குப் சர்வஜன வாக்கெடுப்பு எதுவும் தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




