மட்டக்களப்பு தளவாய், புன்னைக்குடா பகுதிகளில் சட்டவிரோத கட்டிடங்கள்: மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தளவாய் புன்னைக்குடா வீதியில் கட்டிட அனுமதிகளை மீறி வெள்ள நீர் வழிந்தோடும் தோணாக்கள், வடிகான்களை சட்டவிரோதமாக அடைக்கும் காணி மாபியாக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (16) நடைபெற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 14 வது சபை அமர்வில் கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கௌரவ உறுப்பினர் ஜைபர் அவர்கள் சமர்ப்பித்த பிரேரணையின் படி 1987 ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் கட்டிட அனுமதி வழங்கும் ஆக குறைந்த காணி அளவு பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும் எனவே H&TI ordinance ஊடாக சொல்லப்பட்டுள்ள அளவுகளை பின்பற்றி கட்டிட அனுமதி வழங்குவதற்கான பிரேரணையை நிறைவேற்றி தருமாறு சபைக்கு கோரியுள்ளார்.
ஆனால் இது குறித்து ஆராய்ந்து பார்க்கும் போது, கௌரவ உறுப்பினர் தெரிவித்துள்ள Housing and Town Improvement ordinance சட்டத்தில் மாத்திரமல்லாது இலங்கையில் உள்ள பிரதேச சபைகள் சட்டம், நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை சட்டம்,PHI சுகாதார நடைமுறை சட்டம் என அனைத்திலும் ஒரு கட்டிடம் அமைப்பதற்கான ஆக குறைந்த காணி அளவு குறித்து குறிப்பிடப்படவில்லை.
அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்பதன் அர்த்தம் இந்த சட்டங்களின் பிரகாரம் நாம் விரும்பிய குறைந்த அளவிலான காணியில் கட்டிடம் அமைக்கலாம் என்று அர்த்தமில்லை.
ஏற்கனவே கூறப்பட்ட அனைத்து கட்டிட அனுமதி சட்டங்களும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் இந்த சட்டங்களின் அடிப்படையில் அனுமதி வழங்கும் அதிகாரிகள் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே ஆகக் குறைந்த காணி அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அந்த காணியில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால் இவ்வாறு சட்டங்கள் இருந்தாலும் இந்த சட்டங்களை மீறுகின்றவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணத்தினால் இன்றும் புன்னக்குடா வீதியில் உள்ள வெள்ள நீர் வடிந்தோடக் கூடிய தோணாக்கள் சட்டவிரோதமாக அடைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இவ்வாறு பல தோணாக்கள் அடைக்கப்பட்டு அதில் மக்கள் குடியிருப்பாக மாற்றியதன் காரணத்தினால் இன்றும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றது.
கடந்த காலங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகளும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இவ்வாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீதும் மிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
புன்னக்குடா உட்பட உறுப்பினர் கூறிய பகுதிகளில் மிக கூடிய சனத்தொகை அடர்த்தி காணப்படுகிறது, அவர்களுக்கான போதிய காணிகள் இல்லாத நிலையில் காணப்படுகிறது. அதற்காக கட்டிட அனுமதி சட்டங்களை மீறி, மக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு கட்டிட அனுமதி சட்டத்தை அல்லது பிரேரணையை நாம் நிறைவேற்ற முடியாது. அவ்வாறு ஒரு பிரேரணையை நிறைவேற்றி அதனை நாம் நடைமுறைப்படுத்தினால் நாம் அனைவரும் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டி வரும்.
அதை விட ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள காணி தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில காணி மாபியாக்கள் அரச காணிகளை தோணாக்களை அடைத்து அதனை துண்டு துண்டாக பிரித்து அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகை நிதிக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் அதில் சட்டத்தின் பிரகாரம் கட்டடம் அமைக்க முடியாது என்று தெரியாமல் அந்த காணிகளை வாங்கிய ஏழைக் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
எனவே கட்டிட அனுமதி வழங்கப்படும் போது பொது மக்களின் பாதுகாப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சட்டத்தின் பிரகாரம் அனுமதி வழங்கப்பட வேண்டுமே தவிர இருக்கின்ற காணிக்கு ஏற்ப காணிச் சட்டங்களை மாற்ற முடியாது என தெரிவித்தார்.




