பொலிஸ் கட்டளைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நீதி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் குறைபாடுகளை இனம் கண்டு காலத்துக்கு ஏற்றவகையில் திருத்தம் மேற்கொள்ளவது கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை (டிச. 24) நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது பொலிஸ் கட்டளச்சட்டத்தில் குறைகளை கண்டறிவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 3பேரின் தலைமையில் 3குழுக்கள் அமைக்கப்பட்டதுடன் இந்த குழுக்களினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் மற்றும் 2017ஆம் ஆண்டு பொலிஸ் கட்டளைச்சட்டத்தை திருத்துவதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தையும் கருத்திற்கொண்டு புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொலிஸ் கட்டளைச்சட்டத்தை திருத்துமாறு 2010ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சட்டத்தை திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆலாேசனை வழங்கி இருக்கின்றார்.

இந்த கலந்துரையாடலில் சட்டமா அதிபர் சஞ்ஜய ராஜரத்னம் மேலதிக சொலிசிட்ட ஜென்ரல் நெரின் புள்ளே, பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன, சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய ஆகிய அதிகரிகள் உட்பட நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்