விளையாட்டுத்துறை அமைச்சர் பெயர் விபரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் – தயாசிறி

கிரிக்கெட் சபையின் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.இவ்வாறான பின்னணியில் தான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிரிக்கெட் சபையிடம் நிதி பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டார்.ஆகவே அந்த 15 உறுப்பினர்கள் யார் என்பதையும் அவர் பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப் பொறுப்பு சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா மக்கள் விடுதலை முன்னணிக்கு நிதி வழங்கியதாக ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க நேற்று (வியாழக்கிழமை) குறிப்பிட்டார்.

ஆனால் இன்று அந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்த முடியாது என்று குறிப்பிடுகிறார்.

கிரிக்கெட் சபையின் வைப்பில் இருந்து 2 மில்லியன் டொலரை மீளப்பெறுவதற்கு கிரிக்கெட் சபையின் மோசடியாளர்கள் முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.ஒப்பந்தகாரர்களுக்கு நிலுவை தொகை செலுத்துவதற்கான இந்த தொகையை மீளப்பெற நடவடிக்கை எடுத்ததாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் சபை தொடர்பில் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.ஆனால் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.இது முற்றிலும் தவறானது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையிடமிருந்து 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதி பெற்றதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.யார் அந்த 15 பேர் என்பதை அவர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.இந்த கருத்து ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தாக்கம் செலுத்தும்.

கிரிக்கெட் சபையின் வீழ்ச்சிக்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.நான் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த போது பல முக்கிய தீர்மானங்களை முரண்பாடற்ற வகையில் எடுத்தேன்.கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகமான தீர்மானங்களை எடுத்தேன்.

சம்மி சில்வா தலைமையிலான நிறைவேற்று சபையை கலைத்து இடைக்கால குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்தார்.அது தற்போது பாரிய நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது.இந்த இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

இவ்வாறான பின்னணியில் தான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் 83 ஆவது பிரிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள விடயம்,நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கிரிக்கெட் தொடர்பான விவாதத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் மீது பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.நீதியரசர் குற்றமிழைத்திருந்தால் அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.இல்லாவிடின் குற்றச்சாட்டை முன்வைத்த அமைச்சருக்கு தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இவ்விடயம் எதிர்மறையான முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.

கிரிக்கெட் சபையை பலப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு பலவீனப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுப்பதை அமைச்சர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.