ரஷ்யா – வட கொரியா ராணுவ கூட்டணியால் அமெரிக்கா, சீனா கவலைப்பட என்ன உள்ளது?

    வட கொரியாவுக்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு தாக்குதலுக்கு இலக்கானால் மற்றொரு நாடு கைகொடுக்க வேண்டும் என்கிறது இந்த ஒப்பந்தம்.

    புதினின் வடகொரிய சுற்றுப்பயணம் குறித்து தென் கொரியா அதிருப்தி தெரிவித்துள்ளது. ரஷ்யா – வடகொரியா இடையிலான ராணுவ ஒப்பந்தம் எத்தகையது?

    கிம் ஜாங் உன்னுக்கு புதின் பரிசு
    சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வட கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வட கொரிய தலைநகர் பியாங்யோங்கில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வட கொரிய அதிபர் கிம் ஜான் உன்னுக்கு புதின் ரஷ்யாவின் விலை உயர்ந்த சொகுசு காரான ஆரஸ் உள்ளிட்ட பரிசுகளை வழங்கியதாக ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதின் கிம்முக்கு ஆரஸ் காரை பரிசளிப்பது இது முதல் முறையல்ல . கடந்த பிப்ரவரியில் அவருக்கு ஆரஸ் லியூமோசின் காரை புதின் பரிசளித்தார், இருப்பினும் இந்த முறை எந்த மாடலை பரிசாகக் கொடுத்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் காரில் ஒன்றாக சென்றதை காண முடிந்தது.

    ரஷ்யா – வட கொரியா ராணுவ ஒப்பந்தம்
    ரஷ்யாவும் வட கொரியாவும் தங்களுக்கு எதிராக “ஆக்கிரமிப்பு” நடந்தால் ஒருவருக்கு ஒருவர் “பரஸ்பர உதவி” வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று புதினை மேற்கொளிட்டு ரஷ்ய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் எதிராக “ஆக்கிரமிப்பு” ஏற்பட்டால் “பரஸ்பர உதவியை” புதிய ஒப்பந்தம் வழங்கும் என்று புதின் தெரிவித்தார். யுக்ரைன் மீதான வடகொரியாவின் நிலைப்பாட்டை “அதன் இறையாண்மைக் கொள்கையின் மற்றொரு சான்று” என்றும் புதின் கூறியுள்ளார்.

    ரஷ்யாவுக்கு கிம் புகழாரம்
    ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிம் ஜாங் உன் , “வட கொரியா தனது நாடு அல்லது ரஷ்யா எதிர்கொள்ளும் “சம்பவங்கள் அல்லது போர்களுக்கு” “தயக்கமின்றி” பதில்கொடுக்கும்” என்றார்.

    அந்த பதில் என்னவாக இருக்கும் அல்லது “சம்பவம் அல்லது போர்” என்று அவர் கருதுவது எது என்று கிம் ஜாங் உன் விவரிக்கவில்லை.

    “இரு நாடுகளும் ஏற்கனவே எதிர்கொள்ளும் அல்லது எதிர்காலத்தில் நம்மை எதிர்கொள்ளும் பல்வேறு சம்பவங்கள் அல்லது போர்களுக்கு கூட்டு முயற்சியில் பதிலளிக்கும் கடமையை நிறைவேற்றுவதில் எந்த வித்தியாசமும், தயக்கமும், அலைச்சல்களும் இருக்காது” என்று கிம் ஜாங் உன் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம் “முற்றிலும் அமைதியானது மற்றும் தற்காப்புத்தன்மை கொண்டது” என்று கிம் மேலும் கூறினார்.

    எந்தவொரு மேலாதிக்க நாடும் மேலாதிக்க சக்தியைப் பயன்படுத்த முடியாத ஒரு “பல்முனை உலகத்தை” உருவாக்குவதை இந்த ஒப்பந்தம் துரிதப்படுத்தும் என்றும் அவர் கூறினார். “கிம் ரஷ்யாவை “மிகவும் நேர்மையான நண்பர் மற்றும் கூட்டாளி” என்று அழைத்தார். புதினை “கொரிய மக்களின் அன்பான நண்பர்” என்று குறிப்பிட்டார்” என்று அரசு ஊடகமான ஆர்.ஐ.ஏ.யின் அறிக்கை தெரிவிக்கிறது.
    ரஷ்ய அதிபர் புதின் பேசியது என்ன?
    புதின் தனது பேச்சில் ரஷ்யா – வட கொரியா இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பகிரங்கப்படுத்தினார். அத்துடன், பரஸ்பர உதவி, பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆயுத விநியோகம் ஆகியவை பற்றியும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் முன் முயற்சியால் வட கொரியா மீது காலவரையற்று விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    ரஷ்ய பிரதேசத்திற்குள் தாக்குதல் நடத்த வல்ல துல்லியமான நீண்ட தூர ஆயுத அமைப்புகள், எஃப்-16 விமானங்கள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவது பற்றிய அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ நாடுகளின் சமீபத்திய அறிக்கைகளை புதின் தனது பேச்சில் குறிப்பிட்டார். வட கொரியாவுடன் “ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பை வளர்ப்பதையும் அவர் நிராகரிக்கவில்லை.

    ‘எல்லை மீற வேண்டாம்’ – தென் கொரியா
    புதின் – கிம் சந்திப்புக்கு முன்னதாக, இரு தலைவர்களும் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று உளவுத்துறை தகவல் கிடைத்ததாக தென் கொரியா கூறியது.

    “ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால்” செல்ல வேண்டாம் என்று ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகரை தென் கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாங் ஹோ-ஜின் கேட்டுக் கொண்டார்.

    ரஷ்யாவுக்கான முன்னாள் தென் கொரிய தூதரான சாங் ஜின், “உக்ரைனுடனான தனது போரை ரஷ்யா முடித்தவுடன், வட கொரியா மற்றும் தென் கொரியாவில் எது முக்கியமானது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

    “புதின் – கிம் சந்திப்பு கெட்ட செய்தி” – முன்னாள் சிஐஏ ஆய்வாளர்
    யுக்ரேன் போரில் இராணுவ உபகரணங்களுக்காக வட கொரியாவை ரஷ்யா நாடியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

    ஒரு முன்னாள் சிஐஏ ஆய்வாளருக்கு, புடினின் பியோங்யாங்கிற்கான விஜயம், சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட போதிலும் இரண்டு “பரியா மாநிலங்கள்” எவ்வாறு தங்கள் உறவுகளை உறுதிப்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    “புடின் தனது போர் முயற்சிக்கு உதவ உலகில் 198 வது பொருளாதாரத்தை நம்பியிருப்பது மிகவும் பரிதாபகரமானது என்று நான் நினைக்கிறேன்,” என்று அமெரிக்க உளவு நிறுவனமாக சிஐஏ-வின் ஆய்வாளர் சூ மி டெர்ரி, பிபிசியிடம் கூறினார்.

    “உலகின் மற்ற பகுதிகளுக்கு இது மோசமான செய்தியாக இருக்கிறது. ரஷ்யாவுடனான கூட்டாண்மை வட கொரியா தனது ஆயுதங்களை திறம்பட சோதிக்க அனுமதிக்கிறது,” என்று அவர் கூறினார்.
    courtesy BBC Tamil