நெதர்லாந்து மற்றும் துருக்கியின் விசேட தூதுவர்களை-சந்தித்த தினேஷ் குணவர்தன

நெதர்லாந்து தூதுவர் திருமதி. தன்ஜா கொங்க்க்ரிஜ்ப் மற்றும் துருக்கியின் தூதுவர் திருமதி. ஆர். டெமட் செக்கர்சியோக்லு ஆகியோரை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, நேற்று முன்தினம் சந்தித்து தற்போதைய ஒத்துழைப்பின் பல பகுதிகள் குறித்து கலந்துரையாடினார்.

வட மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காக நெதர்லாந்து அரசாங்கம் வழங்கிய தாராள உதவிகளுக்காக வெளியுறவு அமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணித்தல், தொழிற்பயிற்சி மற்றும் தொல்பொருள் தளங்களிலான மறுசீரமைப்புப் பணிகள் ஆகியவற்றுக்கான நெதர்லாந்தின் தொடர்ச்சியான உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சுவடிகள் காப்பக ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக வழங்கப்படும் உதவிகளையும் அமைச்சத் தினேஷ் குணவர்தன பாராட்டினார்.

இலங்கையிலிருந்து நெதர்லாந்திற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சுட்டிக்காட்டிய அமைச்சர், பொருளாதார உறவுகள் மற்றும் சுற்றுலாவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான உறவுகள் பன்முகக் கூட்டாண்மையின் அடிப்படையில் வளர்ச்சியடைந்துள்ளமையை வெளிநாட்டு அமைச்சர் வெளிப்படுத்தினார்.

துருக்கியின் தூதுவர் திருமதி. ஆர். டெமட் செக்கர்சியோக்லு அவர்களுடனான கலந்துரையாடலின் போது, கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக துருக்கி நல்கிய ஆதரவுகளுக்காக தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

கோவிட்-19 தொடர்பான சவால்கள் இருந்தபோதிலும், துருக்கி எயார்லைன்ஸ் இலங்கைக்கு வாராந்த விமானங்களை தொடர்ந்தும் இயக்கி வருவதனால், இரு நாடுகளுக்குமிடையேயான தொடர்புகள் வலுப்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றை மேலும் மேம்படுத்துவதற்கும் மற்றும் சர்வதேச அளவில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குமான சாத்தியங்களை வெளிநாட்டு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

துருக்கியில் இருந்து மேற்கொள்ளப்படும் உயர் மட்ட விஜயங்கள் மற்றும் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் எதிர்வரும் கூட்டம் ஆகியவற்றை அமைச்சர் வரவேற்றார்.