மிகப் பெரிய ஊடக ஒடுக்குமுறையின் ஒத்திகையே உதயன் மீதான வழக்கு – அருட்தந்தை சக்திவேல் காட்டம்

ஊடக தணிக்கை மற்றும் ஒடுக்குமுறைக்கு தயாராகும் அரசு அதற்கான ஒத்திகையை வடக்கில் பார்க்கின்றது. இதன் ஓர் அங்கமாகவே உதயன் பத்திரிகைக்கு எதிராக பொலிஸார் செயற்பட ஆரம்பித்துள்ளனர். நாளை தெற்கிலுள்ள ஊடகங்களுக்கும் இதே நிலைவரலாம். எனவே, அரச பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து சக்திகளும் ஓரணியில் திரளவேண்டும்.

இவ்வாறு சமூகசெயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில்:

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி வடக்கு மக்கள் அனைத்து வழிகளிலும் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அப்பகுதிகளில் உள்ள ஊடகங்களுக்கு எதிராகவும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகவே உதயனை சீண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நினைவேந்தல் நடத்தமுடியாது, மாவீரர் நாளை கடைப்பிடிக்க முடியாது, ஏன் சுனாமி நினைவேந்தலைக்கூட செய்யமுடியாது என்று தடைவிதிக்கப்படும் காலகட்டம்தான் இது. பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்று அறிவித்த பிறகு ஏன் அவரின் படத்துக்கு அஞ்ச வேண்டும்? படத்தை பிரசுரித்த பத்திரிகை ஆயுதம் தூக்குமாறு வன்முறையை தூண்டவில்லை. தகவல் வழங்க வேண்டியது ஊடகத்தின் பொறுப்பு. அதனை வாசகர்கள் தெளிவாக புரிந்து கொள்வதற்கு படங்கள் பிரசுரிப்பது ஊடக நெறிமுறை. அதில் உள்ள தவறு என்ன?
அடக்குமுறைகளுக்கு வடக்கில்தான் எப்போதும் ஒத்திகை பார்க்கப்படும்.

இதற்கு தெற்கில் இருந்து எதிர்ப்புகள் கிளம்புவது குறைவு. அதன்பின்னர் தெற்கிலும் தலைவிரித்தாடும். தற்போதும் அதேபோன்றதொரு நிலைமை உருவாகியுள்ளது. இதற்கு எதிராக தெற்கிலுள்ள ஊடகங்களும் குரல் கொடுக்கவேண்டும், என்றார்.