“கொரோனா வைரஸ் புதிய வகை இளைஞர்களை எளிதில் தாக்கும்” – எச்சரிக்கும் லண்டன் தமிழ் மருத்துவர்

  ரிஸ்வியா மன்சூர், லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
  பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் புதிய வகை திரிபு, பழைய வைரஸ் போல இல்லாமல் 40 வயதுடையவர்களையும் வேகமாகவும் வலுவாகவும் தாக்கி வருவதாக லண்டன் கிங்ஸ் மருத்துவமனை மருத்துவர் ரிஸ்வியா மன்சூர் தெரிவித்துள்ளார்.

  கொரோனா வைரஸின் புதிய திரிபின் தீவிர பரவல் காரணமாக, பிரிட்டனில் வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான நடமாட்ட கட்டுப்பாடுகளை அரசு விதித்திருக்கிறது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் பிற நாடுகளில் இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

  இந்த நிலையில், புதிய நோய்த்தொற்று முந்தைய கொரோனா வைரஸை விட அதி வேகத்தில் பரவக்கூடும் என்ற “உயர்” நம்பிக்கையை கொண்டிருப்பதாக பிரிட்டன் மருத்துவ வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.
  இது தொடர்பாக பிபிசி தமிழிடம் லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ரிஸ்வியா மன்சூர் விரிவாக விவரித்தார். அவர் அளித்த பேட்டியில் இருந்து.

  “பிரிட்டனில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா புதிய திரிபு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மட்டும் 39 ஆயிரம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 350 உயிரிழப்புகள் உள்ளன. இதனால் அடுத்து என்ன செய்வதென்ற குழப்பமும் பீதியும் மக்கள் மனங்களில் உள்ளது. தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.”

  கொரோனா தடுப்பூசி உங்களுக்கு எப்போது கிடைக்கும் – 25 முக்கிய தகவல்கள்
  கொரோனா வைரஸ் புதிய திரிபு: கையை மீறிப்போகிறதா நிலைமை?

  கொரோனா புதிய திரிபு: இந்தியாவுக்கு வந்த பயணிகளுக்கு தொடங்கியது கட்டுப்பாடுகள்
  “இந்த புதிய கொரோனா திரிபு வேகமாக பரவும் தன்மை வாய்ந்ததாக அறியப்படுகிறது. இந்த திரிபு வலிமையானதாக உள்ளது. பொதுவாக வைரஸ் என்பது மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த புதிய திரிபு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாகவும் வலுவாகவும் பரவுகிறது. அதனால்தான் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் புதிய நோயாளிகளின் சேர்க்கையை சமாளிக்கும் அளவுக்கு போதுமான மருத்துவ ஊழியர்கள் இல்லை. மூன்று பேர் பார்க்கும் வேலையை ஒருவரே செய்ய வேண்டிய நிலை நிலவுகிறது.”
  “10 நோயாளிகளை கையாளும்போது எதிர்கொள்ளும் வைரஸ் ஆபத்துகளை விட, அதிக எண்ணிக்கையிலான வைரஸ் பாதித்த நோயாளிகளை ஒரே நேரத்தில் அணுகுவதால் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா புதிய திரிபு பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. அனேகமாக ஒரு வாரத்திலோ, இரண்டு வாரங்களிலோ எங்களைப் போன்ற மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் புதிய திரிபு பாதிப்பு நேர்ந்து தனிமைப்படுத்தப்படும் நிலை வரலாம்.”
  கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
  கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?

  கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
  கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

  கொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
  “அப்படியொரு சூழல் தொடர்ந்தால், பாதிக்கப்படும் நோயாளிகளை கவனிக்க மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவரை நாங்கள் பார்த்துள்ள நோயாளிகளில், வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் கால நேரம் தள்ளிப்போவதாக அறியவி்ல்லை. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு வழங்கும் அதே மருத்துவ நடைமுறைகளைத்தான் இப்போது கடைபிடிக்கிறோம்.”

  “ஆனால், பழைய கொரோனா வைரஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை எளிதாகப் பாதித்து வந்தது. இந்த புதிய திரிபு, 40 வயதளவில் இருப்பவர்களைக்கூட எளிதாக தாக்குகிறது. வைரஸ் பாதிப்பு தீவிரமானால் அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்.”
  “கொரோனா வைரஸ் தடுப்பூசியின் வலிமை எப்படி இருக்கிறது என்பது மூன்று, நான்கு வாரங்களுக்கு பிறகே தெரிய வரும். ஏதேனும் நாள்பட்ட பக்க விளைவுகள் வருமா என்பதை பிறகுதான் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள்.”
  “எனவே, தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் மற்றும் புதிய திரிபுவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் கடைப்பிடியுங்கள்.”
  “மருத்துவர்களான நாங்கள் ஒவ்வொரு முறையும் கோவிட்-19 வார்டுகளுக்கு செல்லும் முன்பாக, கைகளையும் முகங்களையும் சுத்தமாக கழுவிய பிறகு முகக் கவசங்கள், கையுறைகள், தலை முதல் கால் வரை மறைக்கும் பாதுகாப்பு அங்கி ஆகியவற்றை அணிந்து கொள்கிறோம். வார்டில் இருந்து வெளியே வந்ததும் அந்த உறைகளை கழற்றி விட்டு மீண்டும் தூய்மைப்படுத்திக் கொண்டு, கை கால்களை கழுவுகிறோம். அத்தகைய எச்சரிக்கை உணர்வுடன் பொதுமக்களும் இருந்தால் மட்டுமே இந்த கொடிய வைரஸில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்,” என்று ரிஸ்வியா மன்சூர் தெரிவித்தார்.