தனது ஆட்சி அதிகார மாற்றத்துக்கு அமெரிக்க இராணுவம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஜோ பைடன்
இதுகுறித்து தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எனது அதிகார பரிமாற்ற குழு அரசியல் தலைமையிலிருந்து தடைகளை எதிர்கொண்டு வருகிறது. வெளிச் செல்லும் நிர்வாகத்திடம் இருந்து தேசிய பாதுகாப்பு துறையில் எங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் பெறவில்லை.
இது ஒரு சிறிய விஷயம் அல்ல. என் பார்வையில் இது மிகவும் பொறுப்பற்ற தன்மையாகும்.
உலகெங்கிலும் உள்ள அமெரிக்க படைகள் குறித்த தெளிவான விபரங்கள் தேவை. ஏனெனில் அமெரிக்காவின் எதிரிகள் எந்தவொரு குழப்பத்தையும் பயன்படுத்தலாம். எனவே அமெரிக்க இராணுவம் எனது அதிகார பரிமாற்ற குழுவுடன் முழுமையாக ஒத்துழைத்து தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என கூறினார்.
ஆனால் அமெரிக்க இராணுவம் மீதான ஜோ பைடனின் இந்த குற்றச்சாட்டை பாதுகாப்பு செயலர் கிறிஸ்டோபர் மில்லர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆட்சி அதிகார மாற்றத்துக்கு அமெரிக்க இராணுவம் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “அமெரிக்க இராணுவம் இதுவரை 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் 164 சந்திப்புகளை நடத்தி உள்ளது. மேலும் 5 ஆயிரம் பக்கங்களுக்கும் மேலான ஆவணங்களை வழங்கியுள்ளது. இது ஆரம்பத்தில் ஜோ பைடனின் அதிகார பரிமாற்ற குழு கோரியதை விட மிக அதிகம்” என கூறினார்.
மேலும் அவர் “அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அடுத்த வாரம் ஜோ பைடனின் அதிகார பரிமாற்ற குழுவுடன் 3 சந்திப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவற்றில் 2 கொரோனா வைரஸ் தொடர்பாகவும் ஒன்று சைபர் பாதுகாப்பு தொடர்பாகவும் நடைபெறும். இது தவிர மற்ற சந்திப்புகளை ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.