இந்தியாவிலும் தோன்றிய மர்ம தூண்- படையெடுக்கும் மக்கள்

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரென தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில் இந்த மர்மமான உலோகத்தூண் தோன்றியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் திடீரென தோன்றிய ஒற்றைத் தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டது. இதுபோன்ற தூண் இந்தியாவில் தென்பட்டது இதுதான் முதல் தடவையாகும்.

அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் இந்த தூண் காணப்பட்டுள்ளது.

உலோக அமைப்பு தரையில் அமைக்கப்பட்டதாக தோன்றுகிறது, ஆனால் அதன் அடிவாரத்தில் தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

பூங்காவின் பணிபுரியும் உள்ளூர் தோட்டக்காரரான ஆசாராம், இதுபற்றி தெரிவிக்கையில்,

நான் மாலையில் வீட்டிற்குச் சென்றபோது, அது இல்லை. ஆனால் மறுநாள் காலையில் நான் வேலைக்கு திரும்பியபோது, அந்த அமைப்பை கண்டு ஆச்சரியப்பட்டேன். என்று தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தின் மர்ம உலோகத் தூண் அமைப்பு ஒரு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பெருமளவில் பூங்காவுக்கு படையெடுத்த மக்கள் அதன் முன் நின்று புகைப்படங்களையும் ஆர்வத்துடன் எடுத்துச்சென்றனர்.

உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள இந்த மர்ம தூண்களை நிறுவியது யார் என்ற மர்மம் தொடர்ந்தும் நீடிக்கிறது.