இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் “வரலாற்று நூல்”: ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் “வரலாற்று நூல்” இன்று (06.01.2021) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பணிக்குழாம் பிரதானியும் படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.ஏ.பி.என் தெமடன்பிட்டியவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணி 1943 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி நிறுவப்பட்டது. தகவல் தொழில்நுட்பம், சமிக்ஞை நடவடிக்கைகள், இணைய நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட படைப்பிரிவின் 77 ஆண்டுகால வரலாறு குறித்த அனைத்து தகவல்களும் கொண்ட ஒரு ஆய்வு நூலாக இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டமை, லெப்டினன்ட் ஆக சமிக்ஞை படையணியில் அவர் செய்த சேவை, பாகிஸ்தானில் இளம் சமிக்ஞை அதிகாரி பாடெநெறியை பயின்றமை, யாழ்ப்பாணத்தில் சமிக்ஞை அதிகாரியாக பணியாற்றியமை ஆகியவை படையணி வரலாற்றில் அடங்கும்.

பாதுகாப்பு பணிக்குழாம் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.கே. திலகரத்ன, மேஜர் ஜெனரல் பி.ஏ.ஜே. பீரிஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.