யுத்தத்தில் கொல்லப்பட்ட நமது இளைஞர்களை, பொதுமக்களை நினைவுகூர்ந்து யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டிருப்பது வேதனை அளிக்கும் ஒரு விடயமாகும், அது வெந்தபுண்ணில் வேலைப் பாய்சுவதற்கு ஈடானதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலா தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் இன்றையதினம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும்,
யுத்தத்தில் கொல்லப்பட்ட நமது இளைஞர்களை, பொதுமக்களை நினைவுகூர்ந்து யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டிருப்பது வேதனை அளிக்கும் ஒரு விடயமாகும், அது வெந்தபுண்ணில் வேலைப் பாய்சுவதற்கு ஈடானதாகும்.
சொல்லொணா வேதனைகளை அனுபவித்து, பெண்கள், குழந்தைகள், பல்கலைக்கழக மாணவர்களை என வகைதொகையின்றி கொல்லப்பட்ட எம் உறவுகளை நினைவுகூர்ந்து அமைக்கப்பட்ட அந்த நினைவுச் சின்னம் அகற்றப்பட்டிருப்பதானது, இனப்படுகொலையின் வேதனையை மீண்டும் ஒருமுறை எம் இதயங்களில் தோற்றுவித்திருக்கிறது.
இவ்விடயத்தில் பலரும் பலவிதமான கோணங்களில் தமது வேதனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக எமது இளைஞர்கள் தமது எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் அறவழியில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் அரசின் சீண்டிப் பார்க்கும் வலையில் நமது இளைஞர்கள் வீழ்ந்து விடக் கூடாது என்பது எம் அனைவரினதும் எச்சரிக்கை கலந்த அவாவாகும்.
சில தினங்களுக்கு முன்பாதாக மதிப்புக்குரிய நீதியரசர் கௌரவ C.V.விக்னேஸ்வரன் அவர்களும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்திருந்தார்.
நூலகத்தை எரித்தார்கள், பொறுத்துக் கொண்டோம். நாம் விரும்பாத யுத்தத்தை எம் மீது திணித்தார்கள், எதிர்கொண்டோம். பரீட்சை எழுதச் சென்ற எம் குழந்தைகளை கொன்று போட்டார்கள் சகித்துக் கொண்டோம்.
பெண்களை மதிக்கும் தலைமையை துரோகத்தால் கவிழ்த்துப் போட்டார்கள், உள்ளுக்குள்ளேயே அழுது தீர்த்துக் கொண்டோம்.
நமக்குள்ளேயே குழுக்களை உருவாக்கி தேர்தல் மேடைகளில் மோதச் செய்தார்கள், விழித்துக் கொண்டோம்.
ஊடகங்கள் மீது வழக்குத் தொடர்ந்து அவற்றை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் சாணக்கியத்தை சாதுரியமாக முன்னெடுத்திருக்கிறார்கள், நம்பிக்கையோடு முன்னோக்கி நகர்கின்றோம்.
இன்று எம் கல்விச் சமூகத்தில் கைவைத்து நாமே ஒருவர் மீது ஒருவர் காறி உமிழும் காரியத்தை அரங்கேற்ற வைத்திருக்கிறார்கள், பொறுக்குதில்லை நெஞ்சம்.
எம் இளைஞர்கள் ஒரே குரலில் ஒலிப்பது எமக்கு நம்பிக்கையை தருகிறது. அவர்ககள் அறவழியில் முன்னெடுக்கும் போராட்டம், அரசின் வலைக்குள் விழுந்துவிடாது விவேகத்துடன் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.
இதன் பின்விளைவுகளை அனுமானிக்கக் கூடிய முதிர்ச்சியை உடையவர்கள் இவ்வாறு ஓர் பொறியில் மாட்டிக் கொண்டது வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.