இருட்டில் எடுக்கப்பட்ட குருட்டு முடிவுகள்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்பலைகள் கடல் கடந்தும் கிளம்பியுள்ளன. அகற்றப்பட்டமைக்கு பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன விளக்கமளித்துள்ளன.

செய்தவை தவறென சுட்டிக்காட்டப்படும் ​போது அளிக்கப்படும் விளக்கங்களால், தங்கள் வாயாலே பலரும் சிக்கிக்கொள்வர். அதேபோன்றுதான், நினைவுத்தூபி இடித்தழிப்பு விவகாரத்தில் அளிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விளக்கமும் உள்ளது.

வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘ஏதோவொன்று’ சட்டவிரோதமானது எனில், அதனை, இரவோடு இரவாக, மின்குமிழ்களை அணைத்துவிட்டு அகற்றவேண்டிய அவசியம் நிர்வாகத்துக்கு ஏற்படாது. ஏதோவொன்றை மூடிமறைக்கவேண்டும். அல்லது வெளியாருக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, ‘இரவு முடிவை’ நிர்வாகம் எடுத்துள்ளது. அது கண்டிக்கத்தக்கது.

வடக்கு, தெற்குக்கு இடையிலான ஐக்கியத்துக்கு அந்த நினைவுத்தூபி தடையாக இருக்குமென, மானியங்கள் ஆணைக்குழு அளித்துள்ள விளக்கமும் முழு பூசணி​யையும் சோற்றுக்குள் மறைப்பதற்கு சமமாகும். ஏனெனில், அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய அமைப்புகளைச் சித்திரிக்கும் விதத்திலான நினைவுத்தூபிகள் நாட்டிலிருக்கும் ஏனைய பல்கலைக்கழக வளாகங்களிலும் கம்பீரமாய் காட்சியளிக்கின்றன.

ஒரு சமூகம் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் வளாகமொன்றுக்குள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபி நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்குமாயின் பல்லினங்களைச் சேர்ந்தோரும் பரந்துவாழும் பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபிகள் மட்டும் நல்லிணக்கத்துக்கு பங்காமாய் இருக்காது என்பதற்கான உத்தரவாதம் என்ன?

பல்லைக்கழகங்களுக்குள் வெளியார் நுழைவே முடியாது. வளாகத்துக்குள் சென்றால் மட்டு​மே சில தூபிகளை பார்க்கலாம். இவ்வாறிருக்கையில், விவரம் தெரிந்த வயதினர் முதல் முதியோர் வரையிலும் ​சென்றுதிரும்பும் பொதுவெளிகளில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபிகள் நல்லிணக்கத்துக்கு பங்கத்தை ஏற்படுதாது என எவ்வாறு கூறமுடியும்.

ஒன்று பிழையெனில் அதனை திருத்துவதற்கு சரியான முறைமையைக் கையாளவேண்டும். இல்லையேல், நினைவுத்தூபிகள், நினைவலைகளை அழிக்கும் போதெல்லாம் நினைவுகள் உரமேற்றி அதனை நனவாகுமே தவிர அவை ஒருபோதும் அழிந்து போய்விடாது.

யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இ​டிதழிப்பு, அதற்கெதிரான போராட்டங்கள் வடக்கு, கிழக்கிலும், அதனோடிணைந்த செய்திகள் தென்னிலங்கையிலும் திரிபுபடுத்தப்பட்டு விட்டால், ‘நல்லிணக்கம்’ மட்டுமல்ல, இன்னும் பல தசாப்தங்களுக்கு பின்னோக்கிச் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையே ஏற்படும்.

இதேவேளை, ‘இடித்தழிப்பு’ விரைந்துச் சென்ற மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதப்போராட்டத்திலும் குதித்தனர். தங்களுடைய உரிமைகளைக் வென்றெடுப்பதற்கான சாத்வீகமான போராட்டங்களை முன்னெடுப்பது தவறில்லை. ஆனால், போராட்டத்தில் வலிமை குறையும்போது, தாங்கள் செய்தது நியாயமானதென நிரூபிப்பதற்கு எதிர்த்தரப்பினருக்கு அது சாத்தியமாகிவிடும்.

ஆகையால், நல்லிணக்கத்துக்கு கீறல் விழுந்துவிடக்கூடாதெனில், எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் பொதுவானவையாக இருக்கவேண்டுமென வலியுறுத்துகின்றோம்.