மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டையே நாசமாக்குகின்றனர் – சரத் பொன்சேகா

எந்தவொரு சர்வதேச நாடும் எமது நாட்டில் சுயாதீனதில் தலையிட அனுமதிக்க முடியாது என அரசாங்கம் வீர வசனங்களை பேசிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வெளிநாட்டிற்கு கொடுத்து மண்டியிடும் நிலைமை உருவாகப்போகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டினையும் நாசமாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தல்களை நடைமுறைப்படுத்தாமை குறித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் நாளுக்கு நாள் வர்த்தமானி அறிவித்தல்களை விடுத்தாலும் மக்கள் நாளுக்கு நாள் பட்டினியை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த காலத்தில் எமது ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்து மேடைகளில் பேசினர்.

ஆனால் இன்று நாட்டில் விலைவாசி எப்படி உள்ளது என்பது மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள். கற்பனை கதைகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று எவ்வாறு மக்களை நடத்துகின்றனர் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பதாக கூறனர். தமது ஆட்சி மலரும் வரையில் எவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டாம், நாம் ஆட்சிக்கு வந்ததும் புதுமண தம்பதியினருக்கு வீடும், 25 இலட்சம் ரூபாய் பணமும் தருவதாக கூறினார்கள். இந்த கதைகளை நம்பியே மக்கள் ஏமாந்துள்ளனர்.

அதேபோல் 18 வயதிற்கு கூடிய அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்குவதாக அமைச்சர் வீரசேகர தெரிவித்துள்ளார். 18-26 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என வைத்துக்கொண்டாலும், இந்த வயதெல்லைக்குள் மூன்று அல்லது நான்கு மில்லியன் பேர் இருப்பார்கள்.

ஆறுமாத கால பயிற்சி என்றாலும் கூட ஒரு நபருக்கு ஆறு மாதங்களுக்கு ஏழரை இலட்சம் ரூபாய்கள் செலவாகும். ஒரு இலட்சம் பேருக்கு பயிற்சிகளை வழங்குவதென்றால் 75 பில்லியன் ரூபாய் செலவாகும். 7500 கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடியுமா. எனவே இவ்வாறான பொய்யாக காரணிகளை கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம்.

அரச வளங்களை விற்க மாட்டோம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை விற்கவே மாட்டோம் என்றனர், ஆனால் வாக்குறுதியளித்த அனைத்துமே இன்று பொய்யாகி விட்டது. கொழும்பு துறைமுகத்தை நாம் இந்தியாவிற்கு கொடுத்தால் அடுத்த 25 வருடங்களுக்கு எம்மால் பெற்றுக்கொள்ள முடியாது. எமக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்துவிட்டு அவர்கள் 1750 மில்லியம் அமெரிக்க டொலர்களை இலாபமாக பெற்றுக்கொள்வார்கள்.

இதையே நாம் எமது ஆதிக்கத்தில் அபிவிருத்தி செய்தால் 12 வருடங்களில் இந்த இலக்கை அடைய முடியும். 49 வீத உரிமத்தை இந்தியாவிற்கு கொடுப்பது விற்பதற்கு சமமானது.

வெளிநாடுகளுக்கு எமது நாட்டில் தலையிட அனுமதிக்க முடியாது, நாட்டின் சுயாதீனம், உரிமையை பாதுகாப்போம் என வீர வசனம் பேசிக்கொண்டுள்ளது அரசாங்கம். ஆனால் இந்த துறைமுகத்தை வெளிநாட்டிற்கு கொடுத்து மண்டியிடும் நிலைமை உருவாகும், மக்கள் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.