உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் – 73 பேர் சி.ஐ.டி.யின் பொறுப்பில் ; 195 பேர் விளக்கமறியலில்

முப்பது வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் கொல்லப்பட்ட, 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்த, உயிர்த்த ஞாயிறு தினத்தின் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

8 இடங்களில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பிலான குற்றவியல் விசாரணைகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக கூறிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, முழு பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலும் இடம்பெறும் ஆழமான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

அதன்படி இந்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மொத்தமாக 268 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அதில் 195 பேர் தற்போது விளக்கமறியலில் உள்ளதாக கூறினார்.

ஏனைய 73 பேரும் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பில், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.

முன்னதாக கொழும்பு, நீர் கொழும்பு மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின.

கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வ­பிட்டி – புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சியோன் தேவா­லயம் ஆகி­ய கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளும் கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.

மேற்­படி ஆறு தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட இடை­வெ­ளி­யி­லேயே ஆகும்.

அதே தினம் பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்சி சாலைக்கு முன்­பாக உள்ள ‘ நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்­டலில் குண்டு வெடிப்புச் சம்­பவம் பதி­வா­னது. அதனைத் தொடர்ந்து பிற்­பகல் 2.15 மணி­ய­ளவில், குண்­டு­வெ­டிப்­புடன் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­படும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு சென்ற கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரிகளை இலக்கு வைத்து தெமட்­ட­கொட மஹ­வில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.