ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தால் தற்போது சிக்கலாக மாறியுள்ள இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக பிரேரிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் பாத் பைன்டர் நிறுவனத்தின் தலைவருமான மிலிந்த மொரகொட விடயம் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.
மிலிந்த மொரகொடவை இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கும் ஜனாதிபதி கோட்டாபயவின் யோசனைக்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்ற குழு செப்டம்பர் 25ம் திகதி அங்கீகாரம் வழங்கியிருந்தது.
வெளியுறவு அமைச்சின் வரலாற்றில் முதற்தடவையாக கபினற் அமைச்சர் தரத்திலான பதவியாக இந்தப்பதவி அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைவாக கபினற் அமைச்சருக்கு நிகரான தரத்திலான பதவியுடைய தூதுவர் ஒருவரை நியமிக்க முடியாது என இந்தியா அறிவித்துள்ள என அறியமுடிவதாக முன்னணி ஆங்கிலப்பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்னான இலங்கைத்தூதுவராக பொறுப்பேற்பதில் தனக்கு நாட்டமில்லை என மிலிந்த மொரகொடவும் தற்போது அறிவித்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவிற்கான தூதுவர் பதவிக்கு தகுதியானவர்களை இலங்கைத்தரப்பு தேடிக்கொண்டிருப்பதாக அறியமுடிகின்றது.
அண்மையில் இலங்கைக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் விஜயம் மேற்கொண்டிருந்தபோது ஜனாதிபதி கோட்டாபய உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்தபோது அந்தச்சந்திப்புக்களில் மிலிந்த மொரகொட பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.