ஜெனிவா இராஜதந்திரச் சமரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் பிற்பகல் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன் போது ஸ்ரீலங்கா தொடர்பான புதிய பிரேரணை 23 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், ஜெனிவாத் தீர்மானத்துக்கான இணை அனுசரணையை விலக்கிக்கொண்டுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினது அறிக்கையையும் நிராகரித்துள்ளது. இதனால் ஸ்ரீலங்காவிற்கு கடும் இராஜதந்திர நெருக்கடி ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜெனிவா விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரும், வெளிவிவகாரம் தொடர்பான அரச அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.