தமிழர்களின் உரிமைக் கோரிக்கைகளை நசுக்குவதே சரத் வீரசேகரவின் நோக்கம்!- கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகரவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் பற்றியோ, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றியோ பேசுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சரத் வீரசேகரவின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் கஜேந்திரன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் சரத் வீரசேகர, மோசமான இனவெறி சிந்தனைக்குள் புதைந்துள்ளார். ஆகவேதான் இவ்வாறான கருத்துக்களை அவர் வெளியிட்டு வருகின்றார். இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற போரின்போது, தமிழர்கள் மீது இலங்கையின் முப்படைகளே தாக்குதல்களை நடத்தின.

ஆகவேதான் இலங்கை அரச படைகள் மற்றும் இலங்கை அரசின் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை சரத் வீரசேகரவும் எதிர்கொள்ள வேண்டும்.

இதேவேளை, தமிழ் மக்களுக்காகப் போராடி உயிர் நீத்தவர்களை நினைவுகூர்வதை தடுப்பதற்கும் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை நசுக்குவதற்காகவுமே சரத் வீரசேகர இவ்வாறான திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றார்.

இது ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். அவ்வாறான சட்டமூலம் கொண்டுவரப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக நாம் செயல்படுவோம். இவ்வாறான செயற்பாடுகளை இலங்கை அரசு செய்யும் பட்சத்தில், சர்வதேசத்துக்கு முன்பாகத் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்” – என்றார்.