ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஆய்வு செய்ய நிபுணர் குழு நியமிப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்த குழுவை நியமித்துள்ளதாக, அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் இன்று பேசிய அவர்,

“மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை இந்த சிறப்பு நிபுணர் குழு ஆய்வு செய்து அது குறித்த முடிவுகளை முன்வைக்கும்.

இந்த ஆய்வு முடிந்த பின்னரே ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கை குறித்து உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை முன்வைக்கும்.

எனினும், எந்தவொரு உறுப்பு நாடுகளுடனும் எந்தவொரு சர்ச்சையும் இல்லாமல் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மாகாண சபை தேர்தல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்த பின்னர் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிறுவனங்கள் அரசியலமைப்பின் படி மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டியிருப்பதால் மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் மேலும் தாமதப்படுத்த முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் படி, ஆளுநர்கள் மூலம் மாகாண சபைகளை தொடர்ந்து நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை. எனவே, மாகாண சபை தேர்தல்களை நடத்துவது அவசியம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.