மியன்மாரில் ஒரே நாளில் 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொலை!

மியன்மாரில் ஆட்சியைக் இராணுவம் கைப்பற்றியதற்கு எதிராக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (புதன்கிழமை) யாங்கோன் உள்ளிட்ட பல நகரங்களில் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 14 வயது மற்றும் 17 வயதுடைய இருவரும் அடக்கம் என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. 19 வயது பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இதன்படி, கிளர்ச்சி நடந்ததில் இருந்து இதுவரை குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இராணுவம் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ளவேண்டும் என்று மியன்மாரின் அண்டை நாடுகள் கேட்டுக்கொண்டதற்கு மறுநாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த இறப்புகளைப் பார்த்த பிறகு, ஐ.நா. பாதுகாப்பு அவை கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்த பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் மியன்மார் இராணுவத்துக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது பற்றி யோசித்துவருவதாகத் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மியன்மாரில் ஆட்சியைக் இராணுவம் கைப்பற்றியதிலிருந்து நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கமும், வெகுமக்கள் போராட்டமும் நடந்துவருகிறது.

இராணுவ சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும், ஆங் சாங் சூகி உள்ளிட்ட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகிறார்கள்.