இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தலைமையிலான பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், உத்தேச பாராளுமன்ற குழுவும் அதன் தவிசாளரும் சபாநாயகரால் நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் அதன் அங்கத்தவர்கள் 25 உறுப்பினர்களை கொண்டமைதல் வேண்டும் என பிரேரிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழு அதன் முதல் கூட்டத்திலிருந்து ஒரு வருட காலத்திற்குள் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன், அது சமர்ப்பிக்கப்பட்டு 08 வாரங்களில் குறித்த அறிக்கை தொடர்பாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின் அவதானிப்புகளையும் அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் பிரேரணையில் அமைச்சர் பவித்ரா வன்னயாராச்சி, இராஜாங்க அமைச்சர்களான வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே, வைத்தியர் சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹரிணி அமரசூரிய, ரோஹிணி குமாரி விஜேரத்ன, தலதா அத்துகோரள, கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, கோகிலா குணவர்தன, முதிதா பிரஸான்தி, ராஜிகா விக்ரமசிங்க, மஞ்சுளா திசாநாயக்க, டயனா கமகே ஆகியோரும் கையொப்பமிட்டுள்ளனர்.
பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை விருத்தி செய்து அதனை மதித்தல் மற்றும் இலங்கையில் அனைத்து பெண்களையும் சிறுமிகளையும் வலுப்படுத்துவதை உறுதி செய்தல், பால்நிலை அடிப்படையில் பாகுபாடுகளுக்கு உட்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் போன்ற விடயங்களுக்காக இந்த பாராளுமன்ற குழு பிரேரிக்கப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்பு, பதவி உயர்வு வாய்ப்புக்கள் மற்றும் பணியிடங்களில் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து வித பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்கள் பற்றிய பெண்களின் குறைகளை கேட்டல், அனைத்து துறைகளிலும் மற்றும் அனைத்து மட்டங்களிலும் போதியளவான உள்ளூர் வளங்களின் ஒதுக்கீடு மற்றும் இலங்கையில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான அணுகல் ஆகியவற்றை பரிசீலித்தல் மற்றும் அதற்காக முன்னிற்றல் உள்ளிட்ட 10 யோசனைகள் இந்த பாராளுமன்ற குழுவால் நடைபெறவேண்டும் என பெண் உறுப்பினர்கள் பிரேரித்துள்ளமையும் குறிப்பிடதக்கது,