ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் அரசாங்கம் மும்முரம்

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

 

இது தொடர்பாக பல்வேறு உறுப்பு நாடுகளுடனும் அரசாங்கம் தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதுடன், ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் இது தொடர்பாக கடிதங்களை அனுப்பியுள்ள நிலையில், அமைச்சர் தினேஷ் குணவர்தன தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரேசில், ஜப்பான், தென்கொரியா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்து மனித உரிமைப் பேரவையின்  இலங்கை மீதான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் போது முழுமையான ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

முக்கியமாக கடந்த 24ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற போது அதில் பல்வேறு நாடுகள் உரையாற்றியிருந்தன.

அதில் சில நாகள் இலங்கைக்கு ஆதரவாக உரையாற்றின. எனினும் ஜப்பான் நாட்டின் ஜெனிவாவிற்கான தூதுவர் இலங்கை தொடர்பாக உரையாற்றும் போது,

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜப்பான் அந்த செயற்பாடுகளுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சிகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை தொடர்பான பிரேரணையை பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மாலாவி, வட மெசடோனியா மற்றும் மொண்டிநீக்ரோ ஆகிய 6 நாடுகள் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்திருக்கின்றன.

அந்த பிரேரணையில் 15 செயற்பாட்டு பந்திகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக இலங்கையானது பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டை நம்பகரமான முறையில் முழுமையான ஒரு பொறிமுறையின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பனவற்றை தொடர்ச்சியாக சுயாதீனமான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நாடைபெற்வுள்ளதுடன் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதற்கு ஆதரவு தெரிவிக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை அரசாங்கம் கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றது. இந்தியாவும் இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கின்றது.

இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழஙக்குமாறு சீன வெளிவிவகார அமைச்சரிடம் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு சீனா இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று சர்வதேச மேடைகளில் இலங்கையை முழுமையாக சீனா ஆதரிக்கும் என்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக இந்தப் பிரேரணையை தோற்கடிப்பதற்காக பல்வேறு இராஜதந்திர நகர்வுகளை பல மட்டங்களிலும் முன்னெடுத்து வருகின்றது.

ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ஷ இது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்.

அதேபோன்று வெளிவிவகார அமைச்சகம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அது மட்டுமன்றி வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தூதரங்கங்களின் தூதுவர்களும் இது தொடர்பான பிரசார நடவடிக்கைகளிலும் ஆதரவு திரட்டும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.