மத்திய ஆபிரிக்க நாடான எக்குவடோரிய கினியின் முக்கிய நகரமான பட்டாவில் அமைந்துள்ள இராணுவ தளமொன்றில் ஏற்பட்ட தொடர்ச்சியான வெடி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
அதேநேரம் கடலோர நகரமான பட்டாவில் உள்ள ‘Nkoantoma’ என்ற இராணுவத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் சுமார் 615 பேர் காயமடைந்தனர்.
1979 முதல் நாட்டின் ஜனாதிபதியாகவுள்ள தியோடோரோ ஒபியாங் நுயெமா, டைனமைட்டைக் கையாள்வது தொடர்பான “அலட்சியம்” தான் பேரழிவிற்கு காரணம் என்றும், வெடிப்புகள் பட்டாவில் உள்ள அனைத்து வீடுகளையும் கட்டிடங்களையும் சேதப்படுத்தியதாகவும் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால் எண்ணெய் உற்பத்தியாளரான ஈக்வடோரியல் கினியா பாதிப்படைந்துள்ள நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேமரூனுக்கு தெற்கே அமைந்துள்ள 1.3 மில்லியன் மக்களைக் கொண்ட மத்திய ஆபிரிக்க நாடான எக்குவடோரியல் கினியா, 1968 இல் சுதந்திரம் பெறும் வரை ஸ்பெயினின் காலனியாக இருந்தது. பாட்டாவில் சுமார் 175,000 மக்கள் தற்சமயம் உள்ளனர்.