பிரித்தானியாவில் தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி!

இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாகத் தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் லண்டனில் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப்போராட்டத்தின் விளைவாக, தமிழர் சார்பில் அவர் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் பிரித்தானியத் தொழிற்கட்சி அங்கீகரித்துள்ளதுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியை வலியுறுத்தியுள்ளது.

தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரிபன் கினோக் (Shadow Minister,Foreign and Commonwealth Affairs) அவர்கள் பிரித்தானியாவின் தலைமையில் மார்ச்24 ஆம் திகதி ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஒப்புதலிற்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலங்கை மீதான வரைவுத் தீர்மானம் தொடர்பில் தனது அதீத அதிருப்தியையும் வரைவுத்தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விபரங்கள் தெளிவற்றதாகவும் போதுமானதாகவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டி ஆசியப்பிராந்தியத்திற்கான அமைச்சரிற்கு (Foreign and Commonwealth Office, UK)கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

மேலும் அவர் வரைவுத் தீர்மானத்தில் பின்வரும் விடயங்களைக் கருத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

• 27 ஜனவரி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கத்தவறியுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைகளிற்கு உலகளாவிய அதிகார வரம்புக் கொள்கை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை உறுதிப்படுத்தப் பிரித்தானிய அரசு வரைவுத் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளுமா? எனவும்

• IIIM அவசியமானது என்ற உண்மைத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் வரைவுத் தீர்மானத்தில் திருத்தம் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும்

• ஐ.நா பாதுகாப்புக் குழுவிற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் அணுகுமுறை அதன் நிரந்தர உறுப்பினர்களில் இருவரின் வீட்டோ அதிகாரங்களினால் தீர்மானிக்கப்படக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளதோடு இலங்கை விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதனை உள்ளடக்கத் தவறிவிட்டதாகவும் எனவே அதனை உள்ளடக்க வேண்டியும்

• இலங்கை அதிகாரிகளின் அதிகரித்துவரும் அத்துமீறிய செயற்பாடுகளிலிருந்து மனித உரிமை ஆர்வலர்களைப் பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளிற்கு இந்தத்தீர்மானம் வழிவகுக்கின்றது என்பதனை உறுதிப்படுத்தப் பிரித்தானிய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கும் எனவும்

• வரைவுத்தீர்மானத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலிற்கான கால எல்லை18 மாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத நீண்ட காலமாக இருப்பதனால் 6 மாதங்களிற்குள் பொறுப்புக்கூறல் குறித்த அறிக்கையைக் கோருவதற்கு வரைவுத் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப் பரிந்துரை செய்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களிற்கும் தப்பிப் பிழைத்தவர்களிற்கும் பிரித்தானிய அரசாங்கம் கடன்பட்டுள்ளதாகவும் தற்போதைய வரைவினை மேலே முன்மொழியப்பட்ட மாற்றங்களை உள்ளடக்கி விரைவில் மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 10 நாளை அடைந்திருக்கும் நிலையில், தமிழ்மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழங்கிய அழுத்தங்களே இந்த முன்னேற்றத்துக்கான காரணங்களாகும். இதனால் இது அவரின் அகிம்சைப் போராட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி எனக் கருதலாம்.