வீட்டுத்திட்ட நிலுவைத்தொகையை வழங்க ஏற்பாடு செய்யுங்கள் – மகிந்தருக்கு செல்வத்தார் கடிதம்

தொடங்கப்பட்டு நிறைவுக்கு எட்டாத வீட்டுத்திட்ட நிலுவைத்தொகையை வழங்குமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்குக் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

இன்று அவர் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் வீடமைப்பு மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் காலப்பகுதியில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக ஆரம்பிக்கப்பட்ட வீட்டு நிகழ்ச்சித் திட்டமானது இற்றை வரைக்கும் பூர்த்தி செய்யப்படவில்லை.

மற்றும் பயனாளிகளுக்கான மீதமுள்ள கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. இந்த ஏழைமக்கள் தங்கள் சொத்துக்களையும் மற்றும் அவர்கள் கையில் வைத்திருந்த சிறிய தொகைப் பணத்தையும் வைத்துத்தான் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி கிடைக்கும் என்றஎதிர்பார்ப்புடன் இந்த வேலையை ஆரம்பித்தார்கள். ஆனால் ஆரம்பிக்கப்பட்ட இந்தவேலை நிறைவிற்கு வரவில்லை.

இந்த ஏழை மக்கள் கடந்த உள்நாட்டுப்போரில் அனைத்தையும் இழந்தவர்கள். இப்பொழுது மிகவும் அவதிப்படுகிறார்கள். குழந்தைகள்,பெரியவர்கள் மற்றும் சமூகத்தின் பல நிலைகளிலும் வாழும் இவ் மக்கள் தங்களுக்கென ஓர் நிரந்தர வீடு இன்மையால் இன்னும் சிறிய குடிசைகளில் தங்களது வாழ்க்கையை நடாத்தி வருகிறார்கள்.

வீட்டு வசதி என்பது ஒருநாட்டுக் குடிமகனின் அடிப்படைத் தேவை. ஆனால் இந்த மக்கள் அதைப்பார்க்கவும் அனுபவிக்கவும் கூடமுடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்கள்.

எனவே இந்த மக்களுக்குச் சுதந்திரமாக வாழவும் இந்த பாதிப்புக்களிலிருந்து விடுபடவும் ஒரு வீடு தேவை. எனவே அவர்கள் சார்பாக இவர்களின் இந்த வீட்டுத்திட்ட குறைகளை நிறைவிற்குக் கொண்டு வருவதற்கும் அவர்களின் அன்றாட வாழ்வினை சுமூகமாக நகர்த்திச் செல்வதற்கும் வழிவகுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.