வெளிநாட்டு பார்வையாளர்களுக்கான அனுமதி மறுப்பால் ஜப்பானுக்கு 150 பில்லியன் யென் இழப்பு

இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை வெளிநாட்டு பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துவதால் ஜப்பானுக்கு கிட்டத்தட்ட 150 பில்லியன் யென் (1.4 பில்லியன் அமெரிக்க‍ டொலர் ) பொருளாதார இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேய்-இச்சி லைஃப் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் பொருளாதார வல்லுனர்களின் கூற்றினை மேற்கொள்காட்டி டோக்கியோவின் நிக்கி வணிக செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் கொவிட் -19 தொற்றுநோயால் வெளிநாட்டு பார்வையாளர்களை கோடைக்கால விளையாட்டுகளை நேரில் பார்வையிட அனுமதிக்க மாட்டார்கள் என்று சனிக்கிழமை அறிவித்தனர்.

அதனால் 630,000 நுழைவுச் சீட்டுகளுக்கான பணம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் பேட்டிகள் ஜூலை 23 ஆம் திகதியும் பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.