உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் – கல்வி அமைச்சர் பீரிஸ்

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை பெறுபேற்றை இம்மாத  இறுதியில் வெளியிட  எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பரீட்சையின் பெறுபேற்றை  கொண்டு மாணவர்கள் காலதாமதமில்லாமல் பல்கலைக்கழகங்களுக்கு  இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கண்டி கலகெதர பகுதியில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த மாரச் மாதம் இடம்பெற்று முடிந்த  2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு ஜூன் மாதம் வெளியிடப்படும்.

உயர்தர கற்கையினை மேற்கொள்ள தகுதி பெற்ற மாணவர்களுக்கான உயர்தர கற்றல் நடவடிக்கைகள் ஜூலை மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் காலதாமதமில்லாமல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது.

பல்கலைக்கழகங்களில் காணப்படும் பௌதீள வள பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது தொடர்பில்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யோசனைகளை முன்வைத்துள்ளது.

பல்கலைழக மாணவர்களின் தங்குமிட பற்றாக்குறைக்கு  தீர்வுகாண உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி சேவையில் ஈடுப்படுபவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தடுப்பூசி வழங்க சுகாதார  அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட தே;ங்காய் எண்ணெய் விவகாரம் தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.  தனியார் நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயன பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளதாக அரசாங்கமே முதலில் வெளிப்படுத்தியது.

இந்த  எண்ணெயை சந்தையில் விற்பனை செய்ய முடியாத அளவிற்கு சுங்க திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.   தரமற்ற எண்ணெயினை இறக்குமதி செய்த தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையின் மனித உரிமையினை பாதுகாப்பதற்கு உள்ளக மட்டத்திலான பொறிமுறை வகுக்கப்படும். இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது. நாட்டின் உள்ளக விவகாரங்களை ஆராய சர்வதேச நிறுவனத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்றார்.