கடன் மறுசீரமைப்பைக் கோருவதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடனான சந்திப்பின்போது வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்துவதற்கு மேலும் கால அவகாசம் கோரல், கடன் சலுகைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்தல் உள்ளடங்கலாக கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்படாது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அண்மையகாலங்களில் நாட்டின் பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற நிலையில், தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லவிருப்பதாக நிதியமைச்சின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடவிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில வாரங்களில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் இடம்பெறவிருக்கும் சந்திப்பு, சில ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போன்று கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதை நோக்கமாகக்கொண்ட சந்திப்பு அல்ல என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைள் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்தியிருப்பதாவது:

கடந்த சில மாதங்களாக இலங்கை மாத்திரமன்றி உலகநாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றது. இந்த சவால்களுக்கு மத்தியில் பொருளாதார உறுதிப்பாட்டைப் பேணுவதென்பது மிகவும் கடினமான விடயமாக மாறியிருக்கும் நிலையில், கடந்த இருவருடங்களாக மத்திய வங்கி பலதரப்பட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருகின்றது. இருப்பினும் மத்திய வங்கியின் ஊடாக வகுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் ஓரளவிற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணமுடிந்ததுடன் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மை மிகவும் வலுவாகப் புலப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்யமுடிந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த சில வாரங்களாக உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் மற்றும் நெருக்கடிகளின் விளைவுகளுக்கு எமது நாடும் முகங்கொடுக்கவேண்டியிருப்பதுடன் இதுவரையான காலமும் நாம் முன்னெடுத்துவந்த நடவடிக்கைகளில் மாற்றங்களைச் செய்யவேண்டியும் உள்ளது.

அந்தவகையில் இவ்வார ஆரம்பத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை மேலும் தளர்த்துவதற்கும் கடன்களுக்கான வட்டிவீதத்தை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை குறுங்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதற்கு வழிவகுத்தாலும், நீண்டகால அடிப்படையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குப் பங்களிப்புச்செய்யும் என்று நம்புகின்றோம்.

ரூபாவின் பெறுமதியைத் தளர்த்தும்போது டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அதன்படி இருதினங்களுக்கு முன்னர் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. அதற்கேற்ப எதிர்வருங்காலங்களில் மாற்றுத்தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் மத்திய வங்கி தயாராக இருக்கின்றது.

அதேவேளை இதனூடாக நேர்மறையான விளைவுகளும் ஏற்படும். குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தின் அளவின் அதிகரிப்பு ஏற்படுவதுடன் அதன்மூலம் எமது நாட்டின் வெளிநாட்டுக்கையிருப்பு உயர்வடையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.