கற்பனைகளும் கனவுகளும் அழகானவை. மனதுக்கு நிறைவைத் தருவன! ஆனால், யதார்த்தம் அவ்வளவு இனிமையாக இருப்பதில்லை.
கண்களை மூடியபடி, உலகம் இருட்டு என்ற பூனையின் கதைகளை, இந்த உலகம் எத்தனையோ தடவைகள் கேட்டிக்கிறது. ஒவ்வொரு தடவையும், பிறர் சொல்வதைப் பூனை கேட்பதாய் இல்லை. பூனை கேட்காது விட்டாலும், அவலம் என்னவோ மனிதர்களுக்குத் தானே நேர்கிறது. என்ன செய்ய? நம்பிக் கெட்டவர் சிலர்; நம்பச் சொல்லிக் கெடுப்பவர் பலர்.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள், ஒரு கொண்டாட்ட மனநிலையை, இந்த வாரத்தில் உருவாக்கி இருக்கின்றன. குறிப்பாக, கமலா ஹரிஸின் வருகை, தமிழ் ஊடகங்களில் சிலாகிக்கப்படுகிறது.
ஒபாமாவின் வருகை, எவ்வாறு கொண்டாடப்பட்டதோ அதேபோலவே, இப்போதும் நடக்கிறது. ‘தமிழர் உலகாள்கிறார்’ என்ற கோஷத்தை சமூக வலைத்தளங்களில் பரவலாகக் காணக் கிடைக்கிறது. ‘ஈழத்தமிழருக்கு புதுநம்பிக்கை பிறந்துள்ளது’ என்ற வாதங்களை எல்லாம், கடந்த ஒரு வாரமாகக் கேட்கக் கிடைத்தது.
2008ஆம் ஆண்டு இறுதியில், இதேமாதிரியான கொண்டாட்ட மனநிலை இருந்தது. அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமையை, பராக் ஒபாமா பெற்றுக்கொண்ட காலமது. குறிப்பாக, கறுப்பின மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்கள். தங்களது நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று, அவர்கள் நம்பினார்கள்.
ஆனால், நடந்தது வேறு. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு, ஒபாமாவுக்கும் ஹிலாரி கிளின்டனுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஈராக் மீதான போரை, ஒபாமா தவறென்றார். தான், ஜனாதிபதியானால் குவான்டனாமா சித்திரவதை முகாமை மூடிவிடுவேன் என்றார். ஆபிரிக்க அமெரிக்கர்களின் நம்பிக்கையை வென்றார்.
ஒபாமா என்ற வேட்பாளருக்கும், ஒபாமா என்ற ஜனாதிபதிக்கும் இடையில், நிறையவே வித்தியாசங்கள் இருந்தன. ஒபாமாவின் ஆட்சியிலேயே, அமெரிக்கா எண்ணற்ற போர்களைத் தொடுத்தது. அதேபோல, ‘ட்ரோன்’ தாக்குதல்களுக்கு முழுமையான அனுமதியை வழங்கியவர் ஒபாமா. இவரின் ஆட்சிக்காலத்தில், ஏராளமான ஆபிரிக்க அமெரிக்கர்கள், பொலிஸாரின் தாக்குதல்களில் பலியானார்கள்.
ஒபாமாவுக்கு முந்திய ஜனாதிபதியான புஷ்ஷின் ஆட்சிக்காலத்தை விட, ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், பொலிஸாரின் படுகொலைகள் அதிகமாக நடந்தன. கொலைகளைக் கண்டித்தும், நீதிகோரியும் ஆபிரிக்க அமெரிக்கர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்; ஒபாமா அமைதிகாத்தார்.
பொருளாதார நெருக்கடி தொடர்ந்த காலப்பகுதியில், ஆபிரிக்க அமெரிக்கர்கள் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களிலும் வறுமையிலும் வாடினர். ஆபிரிக்க அமெரிக்க சமூகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று, ஒபாமாவைச் சந்தித்து, நிலைமையின் தீவிரத்தை விளக்கினார்கள். குறிப்பாக, தொழில்களைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் சிக்கல்களை எடுத்துக் கூறினர். கறுப்பின அமெரிக்கர்களை, நிறவெறி எவ்வாறெல்லாம் பாதிக்கின்றது என்று எடுத்துக் கூறினர். “ஆபிரிக்க அமெரிக்கர்களின் வறுமையைத் தவிர்க்க, ஏதாவது செய்ய முடியுமா” என, அவர்கள் ஜனாதிபதி ஒபாமாவிடம் கெஞ்சினார்கள். “நான், அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதி” என்று சொல்லி மறுத்துவிட்டார்.
ஒபாமா பதவியேற்ற மூன்றாண்டுகளின் பின்னர், ஆபிரிக்க அமெரிக்கர்களிடையே நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 56 சதவீதமானவர்கள், ஒபாமாவின் செயல்கள் ஏமாற்றம் அளிக்கின்றன எனத் தெரிவித்தனர்.
சாதாரண அமெரிக்கர்கள், ஒபாமாவை செல்வந்தர்களின் செல்லப்பிள்ளையாகப் பார்த்தார்கள். ‘வோல் ஸ்ரீட்’ முற்றுகை, இவரது காலத்திலேயே நடந்தது. இவரது பார்வையின் கீழேயே, இலங்கையில் பேரவலம் நடந்தேறியது. அமெரிக்காவின் போர்களை, முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று கூறிய ஒபாமாவின் காலப்பகுதியிலேயே, புதிய போர்கள் தொடங்கப்பட்டன.
ஒபாமா பதவிக்கு வந்த போது, ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலேயே அமெரிக்கப் படைகள் போரிட்டன. ஆனால், சில ஆண்டுகளில், லிபியா, சிரியா, யெமன், சோமாலியா, நைஜீரியா, உகண்டா, கமரூன் எனப் புதிய நாடுகளில், அமெரிக்கப் படைகள் போரிட்டன. அமெரிக்கப் படைகளின் பிரசன்னம் உலகளாவிய ரீதியில் அதிகரித்தது.
இதை, இப்போது நினைவூட்டவதற்குக் காரணம், புதிதாகத் தெரிவாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதிகள் மீதான அளவுகடந்த நம்பிக்கைகள் குறித்து, எச்சரிப்பதற்கு ஆகும்.
இப்போது ஜனாதிபதியாகியுள்ள ஜோ பைடன், ஒபாமாவின் துணை ஜனாதிபதியாக இருந்தவர். ஒபாமாவின் கைகளில் படிந்துள்ள இரத்தத்தின் மீதி, பைடனின் கைகளிலேயே இருக்கிறது.
பைடன், மிகுந்த சவால்களை எதிர்நோக்குவார். இம்முறை தேர்தலில் பைடன், இலகுவாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பை மீறிய வகையில், அதிகளவான வாக்குகளை டொனால்ட் ட்ரம்ப் பெற்றிருக்கிறார்.
தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக, ட்ரம்பால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், ட்ரம்பின் அடித்தட்டு ஆதரவாளர்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. அதேபோல, மேலவையான செனெட் சபையின் கட்டுப்பாடு, ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்குச் செல்லுமாயின், பைடனால் சுதந்திரமாகச் செயற்பட இயலாமல் போகும். இப்போது, அமெரிக்கா இனத்துவ ரீதியில் பிரிந்துள்ளது; பிளவுபட்ட ஓர் அமெரிக்காவையே, பைடன் பொறுப்பேற்கிறார்.
ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டணியானது, பெரும்பாலும் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் செயற்பட்டவர்களுடன் சேர்ந்தே, தேர்தல் காலத்தில் பணியாற்றியது. குறிப்பாக, அயலுறவுக் கொள்கை சார்ந்த விடயங்களில், அதே பழைய முகங்களே மீண்டும் தோன்றும். மனித உரிமைகளை மதிக்காத, உலகெங்கும் போர்களைத் தொடுக்கின்றதுமான ஓர் ஆட்சியையே எதிர்பார்க்கலாம்.
இனி, கமலா ஹரிஸின் மீதான அபரிமிதமான நம்பிக்கைகளுக்கு வருவோம். அவரின் வருகை தமிழருக்கோ, ஈழத்தமிழருக்கோ பயன் விளைவிக்குமா என்பது ஐயமே. அரசியல், அவ்வாறு நேர்கோட்டில் இயங்குவதில்லை.
பைடன்-ஹரிஸ் கூட்டணியை, எல்லோரும் மெச்சுவதற்கான முக்கிய காரணம், இருவரும் அமெரிக்க அரசியல் அதிகார நிறுவனத்தின் பிரதிநிதிகள்; ட்ரம்ப் ஒரு வெளியாள். இனி, அமெரிக்க அதிகார நிறுவனம், தனது வேலையைச் செய்யும்.
இவ்விடத்தில் ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்’ அமைப்பை நினைவுகூர்வது தகும். 2008ஆம் ஆண்டு உருவான இவ்வமைப்பு, 2008, 2012ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் போது, ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்தது. ஓபாமாவின் வெற்றிக்குத் தாங்கள் பங்காற்றியதாக மார்தட்டி, அவருக்குக் கடிதமும் அனுப்பியது. ஒரு கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தடையை அகற்றுமாறும் கோரினர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
இன்று, இந்த அமைப்பின் இணையத்தளம் செயலில் இல்லை. இங்கு நாம், நிதானமாகச் சிந்திக்க வேண்டிய விடயங்கள் உண்டு. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, சாதித்து என்ன?
ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், ஈழத் தமிழர்களின் வாழ்வில், சொல்லும்படியான மாற்றங்கள் நிகழ்ந்ததுண்டா?
வெறும் காட்சிப்பொலிவுக்கு அப்பால், ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு போன்ற அமைப்புகளின் பலன் என்ன;
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, அமெரிக்காவில் பெற்ற கவனத்தை விட, தமிழர்கள் மத்தியிலும் இலங்கையிலும் புலம்பெயர் சமூகங்களிலும் பெற்ற கவனம் அதிகம். வெற்று நம்பிக்கைகளையே இவ்வாறான செயல்கள் தொடர்ந்து விளைவிக்கின்றன.
கமலா ஹரிஸ் தமிழர்; எனவே, தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஓர் அபத்தம் ஆகும். ஈழத்தமிழர் விவகாரம் என்பது மேற்குலகு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையை வைத்திருக்க முனைவதற்கான ஓர் ஆயுதம் மட்டுமே. ஆனால், இன்று, இலங்கையில் அதிகரித்துள்ள சீனச் செல்வாக்குக் குறித்த அச்சம், இந்த ஆயுதத்தின் வலிமையைக் குறைத்துள்ளது.
இன்று, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அக்கறை, இலங்கை முழுமையாகச் சீனாவின் பிடிக்குள் செல்லாமல் தடுப்பது ஆகும். ஈழத்தமிழர் விடயத்தைக் கையில் எடுப்பது, இலங்கை அரசாங்கத்தைப் பகைக்கும் ஒரு செயல் என்று மேற்குலகு நினைத்தால், அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினையை முழுமையாகக் கைகழுவுவார்கள். இது, இதற்கு முதலும் நடந்துள்ளது; இனியும் நடக்கும்.
அமெரிக்கா, இலங்கை தொடர்பான நிலைப்பாடுகளை, தனது நலன்சார்ந்தே எடுக்கிறது. இதில், ‘கமலா ஹரிஸ் தமிழர்’ என்ற சூத்திரம் எல்லாம், கணிப்பில் வராது.
தமிழர்கள் வாக்களித்துத்தான் ஒபாமா ஜனாதிபதியானார் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதேயளவு அபத்தமே கமலா ஹரிஸால் தமிழர்களுக்கு நன்மை விளையும் என்பது.
இன்று, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு எதிராக, தமிழ்நாட்டில் தமிழர்கள் போராடுகிறார்கள். இந்திய மத்திய அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு, தமிழர்களின் உரிமைக்காக அமெரிக்காவும் கமலா ஹரிஸூம் போராடவா போகிறார்கள். ஒரு தடவை ஏமாறுவதில் தவறில்லை; ஆனால், ஏமாறுவதையே தொடர்கதையாகக் கொண்டதொரு சமூகம் சபிக்கப்பட்டது.