வேண்டாம் இலங்கை ! 31,725 கடவுச்சீட்டுகள் 10 நாட்களில் விநியோகம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இம்மாதத்தின் முதல் 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்துக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தினால், நாளாந்தம், ஒரு நாள் சேவையின் கீழ், வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

திணைக்களத்தில் வழமையான ஒரு நாள் சேவை மூலம் நாளாந்தம் 2,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் நிலையில், இந்த எண்ணிக்கையை 3,500 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் என இரண்டு கட்டங்களாக திணைக்கள ஊழியர்களை பணிக்கு அழைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், அடுத்த வருடம் முதல் அனைத்து மாவட்ட செயலகங்கள் ஊடாகவும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான மற்றும் பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவதைப் போன்றே இத்திட்டம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் அரசாங்க விடுமுறையாக இருந்தாலும், குடிவரவு-குடியகல்வு திணைக்களம் திறந்திருக்குமென அத்திணைக்களம் அறிவித்துள்ளது.