ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதவி விலகினர்

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சு மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக அமைச்சர்கள் கூட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுகையிட்டப்பட்டது.

ஜனாதிபதிக்கு காலக்கெடு
இந்நிலையில், ஜனாதிபதி எதிர்வரும் 13ம் திகதி பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்றிரவு அறிவித்திருந்தார். மேலும், அமைச்சு பதவியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

அத்துடன், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கவும் அறிவித்திருந்தார். இன்னும் 24 மணி நேரங்களில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், ஜனாதிபதி, பிரதமர் மட்டுமல்லாது பணிப்பாளர் சபைகள், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதுவர்கள் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.