காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் விவாதிக்க இடமளிக்க வேண்டும் – கிரியெல்ல வேண்டுகோள்

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி விவாதத்துக்கு இடமளிக்கவேண்டும் என கோரி இருக்கின்றோம் என எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விவாதிப்பதற்கு நாளை பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடா பிரதமர் மற்றும் சபாநாயகரை கோரி இருந்தார்.

இருந்தபோதும் அதுதொடர்பில் அரசாங்கத்தின் பதில் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

காலிமுகத்திடலில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டுவந்த போராட்டக்காரர்கள் மீது அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடத்தி இருந்தது. இதுதொடர்பில் விவாதம் ஒன்றை நடத்த நாளை 25 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இருந்தபோதும் பாராளுமன்றத்தை நாளைய தினம் கூட்டுவது மற்றும் எரிபொருள் பிரச்சினைக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பது கடினமான விடயம் என்ற காரணத்தினால், அவரசகால சட்ட வர்த்தமானி அறிவிப்பை அனுமதித்துக்கொள்வதற்காக பாராளுமன்றம் 27ஆம் திகதி புதன்கிழமை கூடும் சந்தர்ப்பத்தில் இந்த விவாதத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசாங்கத்திடம் கோர இருக்கின்றோம்.

அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டுவந்த போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி அவர்களை துரத்தி அடித்திருப்பது சட்ட விரோதம் என்பதுடன் ஜனநாயக விரோத செயலாகும். அதனால் இதுதொடர்பில் கருத்தாடல் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.