அவர்கள் எரிமலை வெடித்துச் சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடி இருக்கலாம். அப்போது, எரிமலைக் குழம்பால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என பாம்பீ தொல்பொருள் பூங்காவின் இயக்குநர் மாசிமோ ஒசன்னா கூறுகிறார்.
கி.பி 79-ல் வெசுவியஸ் என்ற எரிமலையின் சீற்றத்தால் மொத்த பாம்பீ நகரமும் மூழ்கியது. இந்த எரிமலைச் சீற்றம் பாம்பீ நகரத்தையும் அங்கு குடியிருந்தவர்களையும் சாம்பலில் புதைத்துவிட்டது. தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடம், ஆய்வு செய்வதற்கான ஒரு வளமான ஆதாரமாக மாறி இருக்கிறது.
இந்த மாதம், பண்டைய பாம்பீ நகரத்தின் புறநகரில் ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை அகழ்வாராய்ச்சி செய்த போதுதான், இந்த இரண்டு எச்சங்களையும் கண்டெடுத்துள்ளனர். புதைந்துபோன அந்தச் செல்வந்தர் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கழுத்துக்கு கீழே கம்பளி ஆடையின் தடயங்கள் காணப்பட்டன.
மற்றொரு மனிதரின் வயது 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று தொல்பொருள் தள அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்துபோன மனிதர்களின் உடல்கள் இறுக்கப்பட்ட சாம்பலின் மீது உண்டாக்கிய அச்சைப் பயன்படுத்தி, அவற்றின் வார்ப்புகள் செய்யப்பட்டன.