சர்ச்சைக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்த சீன கப்பல் -பார்வையிட எவருக்கும் அனுமதியில்லை

இலங்கை,இந்தியா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையில் சர்ச்சையை ஏற்படுத்திய யுவான் வான் -05 அறிவியல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு கப்பல் இன்று காலை 08. மணியளவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டது.

இவ்வாரம் இறுதி வரை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் குறித்த கப்பலுக்குள் செல்வதற்கான அனுமதி முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பலை வரவேற்கும் நிகழ்வு வைபவ ரீதியாக இடம்பெற்றது.

இலங்கைக்கான சீன தூதுவர் கி-சென்ஹொங்,கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரிகள்,பாராளுமன்ற உறுப்பினர்களான அட்மிரல் சரத் வீரசேகர,விமல் வீரவன்ச,கெவிந்து குமாரதுங்க,வாசுதேவ நாணயக்கார,அதுரலியே ரத்ன தேரர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இன்று காலை 08.மணிக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த யுவான் வான் கப்பலை துறைமுக வளாகத்தில் கூடியிருந்தவர்கள் இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தேசிய கொடியினை அசைத்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து சகலரும் எழுந்து நின்று கப்பலை வரவேற்றனர்.

யுவான் வாங் 05 என்ற கப்பலானது 2007ஆம் ஆண்டு சீனாவின் தேசிய கொடியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆய்வு, கண்காணிப்பு கப்பலாகும். இந்த கப்பல் 11000 மெற்றிக்தொன் எடையுடைய பொருட்களை ஏற்றிச் செல்ல கூடியதுடன் 222 மீட்டர் நீளமும் 25.2 மீட்டர் அகலமும் உடையது.

சீனாவின் விண்கல கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-05 லொன்ங் மார்ச்-5 பி ரொக்கெட்டை ஏவுவதற்கான கடல்சார் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு பணிக்க பயன்படுத்தப்படுகிறது

சீனாவின் ஜியாங்ஜின் துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த யுவான் வான் கப்பல் கடந்த 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய திட்டமிட்டிருந்தது.

இருப்பினும் இந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதால் தமது நாட்டின் இரகசிய தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் என இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து யுவான் வான் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை தற்காலிகமாக பிற்போடுமாறு இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு அறிவித்தது.

அதற்கமைய யுவான் கப்பல் கடந்த 11ஆம் திகதி திட்டமிட்ட வகையில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதை தாமதப்படுத்தியது.

யுவான் கப்பல் விவகாரம் குறித்து இராஜதந்திர மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினை தொடர்;ந்து குறித்த கப்பல் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் தானியங்கி அடையாள அமைப்பு முறைமைகளை பேணுதல்,மற்றும் இலங்கை கடற்பரப்பில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள கூடாது என பாதுகாப்பு அமைச்சு நிபந்தனை விதித்ததை தொடர்ந்து யுவான் வான் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.எரிபொருள் மற்றும் உணவு பொருட்கள் இடைப்பட்ட காலத்தில் பெற்றுக்கொள்ள யுவான் வான் கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை துறைமுகத்தில் தரித்திருக்கும்.

30 நாட்களாக கடலில் நாட்களை கடத்திய யுவான் கப்பல் பல சவால்களுக்கு மத்தியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இலங்கைக்கும்,சீனாவிற்கும் இடையிலான நட்புறவினை பலப்படுத்தும் வகையில் இந்த கப்பலின் பிரவேசம் அமைந்துள்ளது என இலங்கைக்கான சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்