கோட்டாவுக்கும் அவரது மனைவிக்கும் அரசுப் பணத்தில் சிங்கப்பூரிலிருந்து பாங்கொக் செல்ல தனியார் விமானம்! பந்துல குற்றச்சாட்டு

பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தின் பேங்கொக் செல்வதற்கு அரசாங்க செலவில் தனி விமானம் வழங்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். .
அவ்வாறான சலுகையைப் பெறுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உரிமை உண்டு என்றும் அமைச்சர்கூறியுள்ளார்.

இன்று (16) காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு மக்களின் வரிப்பணத்தில் விமானம் வழங்கப்பட்டதா என ஊடகவியலாளர்கள் வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சிறப்புரிமை உள்ளது எனவும், ஜனாதிபதியின் மரணத்தின் பின்னரும், அவரது மனைவிக்கு அந்த சலுகையை வழங்குவதற்கு சட்டரீதியான கடப்பாடு இருப்பதாகவும்
மேலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தற்போதும் இவ்வாறான சலுகை கிடைத்து வருவதாகவும் அமைச்சர் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.