இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன் யூரோ நிதியுதவி

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பாரிய சமூக – பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்கென 1.5 மில்லியன் யூரோ நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்நிதியுதவியானது விசேடமாக நாட்டுமக்கள் எதிர்கொண்டிருக்கும் உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்புசார் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதனூடாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றும் அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையிலுள்ள வறிய மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு அவசியமான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான இந்நிதியுதவி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி முகாமைத்துவப்பிரிவு பணிப்பாளர் ஜெனேஸ் லெனார்சிஸ், ‘பல மில்லியன் மக்களின் உணவுப்பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கும் பாரிய சமூக – பொருளாதார நெருக்கடியின் விளைவாக இலங்கையர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இப்புதிய நிதியுதவியின் மூலம் இலங்கையிலுள்ள பின்தங்கிய மக்களுக்கான எமது ஆதரவை நாம் மீளுறுதிப்படுத்துகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.