22 ஆவது திருத்தத்தின் மீதான விவாதம் இடம்பெறாவிட்டால் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் – வாசுதேவ

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தை எதிர்வரும் வாரம் எடுத்துக் கொள்ளாவிடில் பாராளுமன்றில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமை உடையவரின் நலனுக்காக செயற்படுவது வெறுக்கத்தக்கதாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் 10 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு மேலவை இலங்கை கூட்டணியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இரட்டை குடியுரிமையை உடையவரின் தேவைக்காகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு சிலர் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை எதிர்க்கிறார்கள்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என நாட்டு வலியுறுத்துவதை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்கினோம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகித்த 11 பங்காளி கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து 20ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் இரட்டை குடியுரிமை உடையவருக்கு அரசியல் அந்தஸ்து வழங்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டி அதனை திருத்திக் கொள்ளுமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் பலமுறை வலியுறுத்தினோம்.

20ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் உள்ள குறைப்பாடுகள் புதிய அரசியலமைப்பு ஊடாக திருத்தம் செய்யப்படும்,ஆகவே நம்பிக்கை கொண்டு 20ஆவது திருத்தச்சட்ட நிறைவேற்றத்துக்கு ஆதரவு வழங்குங்கள் என முன்னாள் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியதன் பின்னரே 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கினோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு முன்னேற்றகரமான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.மாறாக காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன.புதிய அரசியலமைப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நிறைவேற்றவில்லை.

இவ்வாறான பின்னணியில் தற்போது அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.சகல அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் இறுதி வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டு,பாராளுன்றத்துக்கு சமர்ப்பிக்கும் நிலையில் இருந்த போது பொதுஜன பெரமுனவின் ஒருசிலர் அதற்கு எதிராக செயற்பட்டு,திருத்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தை தடுத்தார்கள்.

கட்சி தலைவர் கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய எதிர்வரும் வாரம் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.இரட்டை குடியுரிமையாளர் பாதுகாக்கவும்,அவரின் தேவைக்காகவும் மீணடும் விவாதம் பிற்போடப்பட்டால் அதற்கு எதிராக பாராளுமன்றில் கடுமையான எதிர்பை வெளிப்படுத்துவோம் என்றார்.