முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது – அமைச்சர் பந்துல

முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் தனியொரு நபர் மீதோ அல்லது குறித்தவொரு அரசாங்கத்தின் மீதோ குற்றஞ்சுமத்த முடியாது.

நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் குறித்த வரலாற்றினை மீட்டிப்பார்த்தால் அதற்கான வாய்ப்பு கிடைக்காது. எவ்வாறிருப்பினும் இவ்விடயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியாது என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 39 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் கடந்த 7 ஆம் திகதி அறிவித்தது.

இந்நிலையில் கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக பதவி வகித்துள்ளவர்கள் என்ற ரீதியில் நீங்களும் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கு பொறுப்பு கூற வேண்டுமல்லவா என்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பினை ஏற்றுக் கொள்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். எனவே நீதிமன்றத்திற்கு கௌரமளிக்கும் வகையில் நியாயத்தை வழங்குவதற்கு இடமளிப்போம். பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் நிபுணத்துவ புரிதல் காணப்படின், அது தொடர்பான வரலாற்று தரவுகளை ஆராய்ந்தால் இந்த பொறுப்பினை தனிப்பட்ட நபர்கள் மீதோ அல்லது குறித்தவொரு அரசாங்கத்தின் மீதோ சுமத்த முடியாது என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். இது எனது பொருளாதார ரீதியான விளக்கமாகும் என்றார்.