சுமந்திரனின் முடிவுகளை கூட்டமைப்பு எதிர்க்கும்-சிறீதரன்

சுமந்திரன் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு எதிராகவே செயல்பட வேண்டும் என்ற எண்ணம்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அதிகம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் காட்டம் வெளியிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது 21ஆவது (22ஆவது) திருத்தச் சட்டத்திற்கு வாக்களிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு என்ன கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு அவர் பதிலளிக்கும் போது, 22ஆவது திருத்தச் சட்டம் சபையில் முன்வைக்கப்பட முன்னர் நாம் கூடிக் கதைக்கவில்லை. வியாழக்கிழமை (20ஆம் திகதி) நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே உரையாற்றினார். மறுநாள் வெள்ளிக்கிழமை (21ஆம் திகதி) எமது கட்சி கூடிய போது, நான் எதிராக பேசி விட்டேன்.

எனவே 22இற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என்று சுமந்திரன் கூறிவிட்டார். நான் நடுநிலைமை வகிப்பது என்ற முடிவை எடுத்தேன். எனினும் சித்தார்த்தன், கருணாகரம், அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் “8 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார். குருந்தூர்மலை உள்ளிட்ட பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உத்தரவாதமளித்துள்ளார். 22ஆல் எமது மக்களுக்கு – தமிழ் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எனவே அதனை ஆதரிப்பதற்கு அச்சம் தேவையில்லை. எனவே ஆதரிப்போம்” என கூறினர்.

இந்த நிலையில் கட்சியின் பெரும்பான்மையினரின் முடிவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கலையரசன் கூறினார். அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து கூடிப் பேசிய எமது 7 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 4 பேர் ஆதரவளிப்பது என்றும் ஒருவர் பெரும்பான்மை முடிவிற்கு கட்டுப்படுவது என்றும் நான் நடுநிலை வகிப்பது என்ற நிலையில், கட்சியின் விதியின்படி நானும் பெரும்பான்மையினரின் முடிவிற்கு ஆதரவளிக்கக் கட்டுப்பட்டேன்.

இதனால் அன்றைய தினம் 6 பேர் 22ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம். முன்பெல்லாம் சுமந்திரன் முடிவை அறிவிப்பார். அதை நடைமுறைப்படுத்தவே பார்ப்பார். அந்த கோபம் எல்லோரிடமும் நிறைந்துள்ளது. எனவே சுமந்திரனின் முடிவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலை பலரிடம் காணப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலின் போது கூட டலஸிற்கு ஆதரவளிக்க வெண்டும் என்ற விடயத்தில் கூட பலர் விரும்பியிருக்கவில்லை. அப்போதே சுமந்திரனின் முடிவிற்கு எதிர் முடிவு எடுக்கும் மனநிலை கட்சிக்குள் வலுத்து விட்டது. 22ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் கூட சுமந்திரன் எமது கட்சியில் இருக்கும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் பார்க்க சட்ட விடயங்களில் அனுபவம் உள்ளவர் – அறிவு உள்ளவர்.

முன்னரே சூம் செயலி மூலம் அனைவரையும் இணைத்து கதைத்திருக்கலாம். ஆனால் அதனை அவர் கதைக்கவில்லை. இந்நிலையில் தான் அவரின் முடிவிற்கு எதிராக கட்சியினர் ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தனர். இனிவரும் காலத்திலும் இது செல்வாக்கு செலுத்தும். புதிய அரசமைப்பை ஒரு வருடத்திற்குள் கொண்டு வந்து தீர்வு காணும் ரணிலின் முயற்சிக்கு ஆதரவு என்று அவருடனும் பேசாமலே அவர் கூறிவிட்டார்.

இனி யார் எதிர்ப்பு என்று சொல்வார்கள்? என்ற எண்ணம், கட்சிக்குள் இருக்கும் ஒற்றுமையின்மை – கூட்டு சேராமை என்பன இன்னும் இன்னும் பலவீனங்களை தந்து கொண்டிருக்கப் போகிறது. இதை அவர் எப்போது மதிக்கப் போகிறார் என்பது தெரியாதுள்ளது.

சுமந்திரனின் முடிவுகளை கூட்டமைப்பு எதிர்க்கும்! சிறீதரன் காட்டம் | Stand Against Sumandran Sritharan

 

அண்மையில்கூட, ஜனாதிபதி ரணில் அறிவித்தவற்றை (இனப் பிரச்சினை தீர்வு குறித்து) எம்முடன் கதைத்துவிட்டுத் தான் பேச்சாளர் வெளியில் சொல்ல வேண்டும். அது தானே பெறுமதியானது. பேச்சாளர் சொல்லிவிட்டு நாம் சொல்லும் போது தானே முரண்பாடு வரும். இது சுமந்திரன் மட்டுமல்ல சுரேஷ் பிரேமசந்திரன் பேச்சாளராக இருந்த போதும் இது தான் நடந்தது. அவரை விட சுமந்திரன் கொஞ்சம் கூட செய்வார்.

இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். கட்சி பேச்சாளர் தன்னுடைய கருத்தை முன்னரே வெளியில் சொல்லிவிட்டு கட்சிக்குள் பேசியதன் வெளிப்பாடு தான் இப்போது மெல்ல மெல்ல வெளிப்படத் தொடங்கியுள்ளது.

22ஆவது திருத்தச் சட்டத்தில் அவரின் எதிர்க்கும் முடிவு தான், சார்பாக வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையை கட்சிக்குள் கொண்டு வந்தது. அவரின் முடிவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தான் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் பேரிடம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.