கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்,
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பரீட்சைக்கான புதிய திகதி 6 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், க.பொ.த சாதாரண தர வகுப்பில் படிக்கும் மாணவர்களில் சுமார் 50 சதவீதமான மாணவர்கள் தற்போது கல்வியைத் தொடர முடியாத சூழலில் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது கொரோனா தொற்றின் தாக்கத்தினால் நடத்தமுடியாது போயுள்ளதுடன் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பினை கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.