ஒருபுறம் பேச்சுக்கு அழைப்பு- மறுபுறம் காணி ஆக்கிரமிப்பு- கஜேந்திரகுமார் சீற்றம்

“இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி ஒருபுறம் பேச்சுக்கு அழைப்பு விடுத்து விட்டு, மறுபுறம் தமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமிக்க இடமளிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் இது மறைக்கப்பட முடியாத உண்மை” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் மொத்த இராணுவத்தினரது எண்ணிக்கையில் அதிகளவானோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரது செயற்பாடுகள் எல்லை கடந்து செல்கின்றன. காணி ஆக்கிரமிப்பு தொடர்ந்து இடம்பெறுகின்றன.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண பேச்சுக்கு ஜனாதிபதி ஒருபுறம் அழைப்பு விடுத்து விட்டு, மறுபுறம் தமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமிக்க இடமளிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது மறைக்கப்பட முடியாத உண்மை. அரசு இனவாதம், பௌத்த சித்தாந்தத்துடன் செயற்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் எவ்வாறு தீர்வு காண முடியும்? விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தற்போதும் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.

இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு இனவாதத்தை விடுத்து செயற்படும் வரை ஒருபோதும் நாடு முன்னேற்றமடைய முடியாது.  நாட்டு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்யவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிரான செயற்பாடுகள் மாத்திரம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. தனிப்பட்ட அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு.