சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை எதிர்த்து கடற்றொழிலாளர்களை பாதுகாப்போம் – சட்டத்தரணி சுகாஷ்

சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை எதிர்த்து கடற்றொழிலாளர்களை பாதுகாப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருக்கின்ற சட்ட விரோதமான கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக, ஜனநாயக வழியில் போராடி கொண்டிருக்கின்ற அப்பாவி மீனவ குடும்பங்களுக்கு எதிராக, பொலிசார் வழக்கு தாக்கல் செய்து இன்றையதினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தார்கள்.

இந்த வழக்கிற்கு மீனவர்கள் சார்பில் ஆஜராகிய பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இவ் விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்,

இன்று (08) நாங்கள் நீதிமன்றத்திலே, பொலிசாருடைய வழக்கை எதிர்த்து குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவையின், எண்பத்தோராம் பிரிவின் கீழ், பொலிஸார் இந்த வழக்கை, தாக்கல் செய்ய முடியாது.

என்றும், இதில் அப்பாவி மீனவர்கள், தங்களுடைய வாழ்வாதாரமும், ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் சட்டவிரோதமாக, எந்தவிதமான அனுமதியும் பெறாது அமைக்கப்பட்டிருக்கின்ற, கடலட்டை பண்ணைகள் அகற்றப்பட வேண்டும் என ஜனநாயக ரீதியிலேயே போராடுகிறார்கள் என்றும், ஜனநாயக ரீதியில், முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை எண்பத்தோராம் பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் கொண்டு வர முடியாது என்பதையும் சுட்டிக்காட்டி வாதாடியிருந்தோம்.

அந்த அடிப்படையில் இன்றையதினம் சந்தேக நபர்களாக முற்படுத்தப்பட்ட மீனவர்களை பிணையில் விடுவித்த நீதிமன்றம் அடுத்த தவணை கடலட்டை பண்ணையாளர்களை, நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கட்டளையிட்டு இருக்கிறது.

குறித்த வழக்கில் மகிந்த மற்றும் சரண்யா ஆகியோரும் ஆஜராகி இருந்தார்கள்.