சர்வதேச தலையீடின்றிய பேச்சுவார்த்தை காலத்தை கடத்தும் செயல்! சாள்ஸ் நிர்மலநாதன்

இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பலனும் இல்லை, அது வெறுமனே காலத்தை கடத்தும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் வைத்து இன்று (25.12.2022) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

சர்வதேச அழுத்தங்கள்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது நாட்டினுடைய ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான உரிய தீர்வை நோக்கிய அறிவிப்பு அல்லது முன்மொழிவை பற்றி பல இடங்களில் கூறி வருகின்றார், அவ்வாறு கூறுவதற்கு சர்வதேச நாடுகளுடைய அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம்.

ஏனென்றால் இன்று இலங்கையில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடியை சர்வதேச நாடுகளுடைய உதவி இல்லாமல் மீட்டெடுக்க முடியாது. ஆகவே சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்துவதற்கு நாட்டினுடைய ஜனாதிபதி இந்த முன் மொழிவை முன் வைக்கக்கூடும்.

தமிழ் கட்சிகளின் இணக்கப்பாடு
என்னைப் பொருத்தவரையில் முதலில் தமிழ் கட்சிகள், வடக்கு கிழக்கில் இருக்கின்ற மத தலைவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

ஒவ்வொருவரும் வரைவு தொடர்பாகவும் தீர்வு திட்டம் தொடர்பாகவும் ஒவ்வொரு விதமாக கதைப்பது என்பது அவர்களது கட்சிகள் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என கதைக்கின்றார்களோ தெரியாது. என்னை பொருத்தவரையில் தமிழர்களுடைய தீர்வு என்பது ஒட்டுமொத்த கட்சிகளும் முதலில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பிற்பாடு அரசியல் யாப்பில் எப்படிப்பட்ட மாற்றங்கள் கொண்டு வந்தால் தமிழர்கள் இறைமையுடன் வாழ முடியும் என்ற ஒரு வரைபிற்கு வர வேண்டும்.

ஒப்பந்தங்கள் நடைமுறை
ஏனெனில் 1948 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு கிழிக்கப்பட்டன. இந்திய இலங்கை ஒப்பந்தங்கள் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆகவே வெறுமனே இலங்கை அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

சர்வதேச நாடுகளின் தலையீடு
குறிப்பாக சர்வதேச நாடுகள் உடைய மத்தியஸ்தம் குறிப்பாக இந்தியா அமெரிக்கா அல்லது பிரித்தானியா இந்த மூன்று நாடுகளைச் சார்ந்த ஏதோ ஒரு நாடுகள் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை செய்வது என்பது காலத்தை கடத்துகின்ற செயலாகத்தான் இருக்கும்.

அந்த பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கு உரிய இறைமை உடன் வாழக் கூடிய தீர்வு வரும் என்பது எனக்கு நம்பிக்கை இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.